ஒரு மாத காலத்திற்கு முகக்கவசம் அவசியம்: கேரளா அரசு திடீர் உத்தரவு

ஒரு மாத காலத்திற்கு முகக்கவசம் அவசியம்: கேரளா அரசு திடீர் உத்தரவு

கேரளாவில் அடுத்த ஒரு மாதத்திற்கு முகக்கவசம் அணிவதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.

சீனாவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி, மதுரை, சேலம் மற்றும் தூத்துக்குடியில் தலா ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை.

கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் நேற்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 58 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் அடுத்த ஒரு மாத காலத்திற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜன.13-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனாலும், பொது இடங்களிலும், பணி செய்யும் நிறுவனங்களிலும், வாகனங்களில் செல்லும்போதும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டது ஏன் என்பது குறித்து கேரளா அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் டிங்கு பிஸ்வாஸ் கூறுகையில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரசும் பரவி வரும் வேளை என்பதால் முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டாம் என்று கேரள மாநில அரசின் உத்தரவு இதுவரை திரும்பப் பெறவே இல்லை. பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார். கேரளாவில் ஜன.15-ம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 637 ஆகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in