
முகமாற்றம் செய்து ஆபாச வீடியோ வெளியிட்ட ஆட்டோ டிரைவரை சிவகங்கை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அகே பிரான்மலையைச் சேர்ந்தவர் தயாள பிரபு. இவர் சமூக வலைதள டிக்டாக் பிரபலம். இவரது வீடியோ, போட்டோக்களை ஒரு கும்பல் முகமாற்றம் செய்து சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ வெளியிட்டது. இதன் மூலம் இக்கும்பல் பலரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் புகாரளித்தனர். தன்னை, தனது குடும்ப உறுப்பினர்களை முகமாற்றம் செய்து ஆபாச வீடியோ வெளியிட்ட ஈரோடு ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் தயாளபிரபு புகாரளித்தார்.
இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார், ஈரோடு ஆட்டோ டிரைவர் ரஞ்சித்தை கைது செய்தனர். இவர் மீது வேறு புகார்கள் உள்ளனவா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.