மாணவி சத்யா கொலையை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்: தொலைபேசி எண்களை வெளியிட்டது சிபிசிஐடி

கொலையான சத்யா, கைது செய்யப்பட்ட சதீஷ்.
கொலையான சத்யா, கைது செய்யப்பட்ட சதீஷ்.

சென்னையில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யா கொலை வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை சிபிசிஐடி வெளியிட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (47). கால் டாக்ஸி ஓட்டுநராக இருந்தார். இவரது மனைவி ராமலட்சுமி (43) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு சத்யா (20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தயாளன் என்பவரும், ஆதம்பாக்கம் ராஜா தெருவில் வசித்து வந்தார். இவரது மகன் சதீஷ் (23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சத்யாவும் சதீஷும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சிலமாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு அக்.13-ம் தேதி மதியம் 1 மணியளவில் வந்த சத்யா, முதலாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் சென்று பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த சதீஷ், தாம்பரத்தில் இருந்து நடைமேடைக்குள் வந்துகொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சத்யாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சத்யா, ரயில் சக்கரத்தில் சிக்கி, தலை துண்டித்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணநேரத்தில் நடந்துமுடிந்த இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் சதீஷை பிடிக்க முயன்றனர் ஆனால் அகப்படாமல் ஓடிவிட்டார். பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மகள் இறந்த துக்கம் தாளாமல் சத்யாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டார். சத்யா கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் சத்யா கொலையில் தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி இன்று தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில்," சத்யாவை ரயிலில் தள்ளிவிட்ட சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள், செய்திதாள்களுக்கு தகவல் கொடுத்த நபர்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்த நபர்கள் யாரேனும் இருந்தால் இச்சம்பவம் தொடர்பாக, தகவல் சொல்ல விரும்பினால் சொல்லலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

" அவர்கள் இவ்வழக்கை விசாரணை செய்யும் செல்வகுமார், காவல் துணை கண்காணிப்பாளர், 94981 42494 , க.ரம்யா, காவல் ஆய்வாளர், காவல் கட்டுப்பாட்டு அறை, குற்றப்புலனாய்வுத்துறை 94981 04698, குற்றப்பிரிவு 04428513500 ஆகிய கைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல்களை மின்னஞ்சல் மூலமாகவும் (dspoc2cbcid@tn.gov.in) தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்கள் குறித்த விவரங்களை வெளியீடு மாட்டோம்" என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in