உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் மீது பண மோசடி, பாலியல் புகார்

உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் மீது பண மோசடி, பாலியல் புகார்

ஆளும் திமுக அமைச்சர்கள் பெயரை கூறி ரூ.2 லட்சம் பணம் மோசடி செய்ததுடன், பாலியலுக்கு வற்புறுத்தி மிரட்டல் விடுக்கும் உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின். மத்திய சென்னை மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் ஒருவர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த  ஷோபனா இன்று சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

”கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, எனது பள்ளித் தோழி ஒருவர் மூலமாக ராஜசேகர் என்பவர் அறிமுகமானார். திமுக-வை சேர்ந்த ராஜசேகர், உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் மன்றம் மற்றும் நற்பணி மன்றத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் எனது கணவர் லோகஷ்க்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். தமிழக அமைச்சர்கள் பலரை தனக்கு நன்றாக தெரியும் எனக் கூறி, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்தார். அதனை நம்பி எனது கணவருக்கு அரசு வேலை வேண்டி, ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்தேன்.

பின்னர் ஒன்றை மாதம் கழித்து வேலை குறித்து ராஜசேகரிடம் கேட்டபோது, மேலும் ரூ.1.50 லட்சம் கொடுத்தால் மறுநாளே வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதை நம்பி ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்தேன். பின்னர் எனது கணவருக்கு சிங்கபெருமாள் கோவில் பகுதியில் மாநகராட்சியில் வேலை கிடைத்தது. அங்கு  எனது கணவர்  ரூ.2 லட்சம் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தது குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்தார். அவர்களோ ’தற்காலிக வேலைக்கு எதற்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்தாய்’ எனக் கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் உடனே ராஜசேகரிடம் சென்று, இது குறித்து கேட்டோம்.

அதற்கு ராஜசேகர் தனது நண்பர் சுரேஷ் உடன் சேர்ந்து, அடித்து துன்புறுத்தினர். பின்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எனது கணவர் மீது கஞ்சா வழக்கு போடப்போவதாய் மிரட்டியதுடன், என்னையும் பாலியல் ரீதியாக வற்புறுத்தியும், வாட்ஸ்அப் வாயிலாக ஆபாச மெசேஜ் அனுப்பி அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த வாரம், தற்கொலைக்கும் முயற்சித்தேன்.

நாளுக்கு நாள் ராஜசேகரின் மிரட்டலும் அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால் காவல்துறையிடம் புகாரளிக்க முயன்றேன். அதற்கும் அந்த ராஜசேகர் ‘நான் ஆளும்கட்சியில் இருக்கிறேன். உன்னால் எங்களை எதுவும் செய்ய முடியாது’ என எச்சரித்து கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே ராஜசேகர், சுரேஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு தனது புகாரில் ஷோபனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி் வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in