தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு: நவம்பர் 21-ம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்யலாம்!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு: நவம்பர் 21-ம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்யலாம்!

இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள நவ. 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சம்பா,  தாளடி பருவத்துக்கான  பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 15 தினங்களாகவே கனமழை தொடர்ந்ததால் பல பகுதிகளிலும்  மின்சாரம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அனைவராலும் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அதிக மழைப்பொழிவை சந்தித்த சீர்காழிக்கு வந்திருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பயிர் காப்பீட்டுக்கான  கடைசி தேதியை  நீட்டித்து கால அவகாசம் தரவேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய விவசாயத்துறை அமைச்சருக்கு பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார்.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்திட வழிவகை இல்லாத போதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்  முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21 வரை நீட்டித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, சனி (19.11.2022) மற்றும் ஞாயிறு கிழமையில் (20.11.2022) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு. ராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 27 மாவட்டங்களைச் சேர்ந்த  விவசாயிகள்  காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை,  அசல் வங்கிக் கணக்கு புத்தகம்,  கிராம நிர்வாக அலுவலரின் சான்று, கணினி சிட்டா ஆகியவற்றுடன் சென்று  ஏக்கருக்கு 525 ரூபாய் 75பைசா பிரிமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என  வேளாண்மை - உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in