செங்கோட்டையைச் சென்றடைந்தது மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்: பயணிகள் மகிழ்ச்சி

செங்கோட்டையைச் சென்றடைந்தது  மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்: பயணிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை - திண்டுக்கல் விரைவு  ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தீபாவளி பண்டிகையான  நேற்று அது செங்கோட்டை நோக்கிய தனது பயணத்தை  தொடங்கி இரவு எட்டு முப்பது மணிக்கு செங்கொட்டையை சென்றடைந்தது.

மயிலாடுதுறையிலிருந்து திருநெல்வேலி வரை  இயக்கப்பட்டு வந்த மயிலாடுதுறை -  திருநெல்வேலி பயணிகள் ரயில்  கரோனா காலகட்டத்தில் மற்ற ரயில்களைப் போலவே  நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று அபாயம் குறைந்த பிறகு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ரயில் மட்டும் இயக்கப்படாமலேயே இருந்தது. இதனை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில் மயிலாடுதுறையில் இருந்து  திண்டுக்கல் வரையில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலையும் மதுரை - செங்கோட்டை ரயிலையும்  ஒன்றாக இணைத்து ஒரே ரயிலாக இயக்க  ரயில்வே துறையினர்  முடிவு செய்தனர். அதனையடுத்து அக்டோபர் 24 தீபாவளி முதல் மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை விரைவு ரயில்கள் (16847/16848) மற்றும் மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் (06665/06662) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரயிலாக புதிய ரயில் எண்களுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

அதன்படி மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (16847) மயிலாடுதுறையிலிருந்து நேற்று  காலை 11.30 மணிக்கு புறப்பட்டு தனது செங்கோட்டை பயணத்தை தொடங்கியது. குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர்,  மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை,  வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ஊர்கள் வழியாக இரவு 08.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேர்ந்தது

மறு மார்க்கத்தில் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து இன்று  காலை 07.00 மணிக்கு புறப்பட்டது. அது  மாலை 05.10 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேறும். பகல் நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து  தென் மாவட்டங்கள் வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்கப்படுவது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in