திண்டுக்கல்லில் இருந்து கப்பலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 'காயர் பித்துகள்'

காயர் பித்
காயர் பித்திண்டுக்கல்லில் இருந்து கப்பலில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் 'காயர் பித்துகள்'

வெளிநாடுகளில் வீடுகள், சிறிய பண்ணைகளில் செடிகள் பராமரிக்க மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்குத்  தேவைப்படும் தென்னை நார் கழிவுகள்,  திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டிகளாக (காயர் பித்) மாற்றப்பட்டு  வெளிநாடுகளுக்கு கப்பல்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், அய்யம்பாளையம், பழநி, விருப்பாட்சி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம் நடக்கிறது. தென்னை மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள் வடமாநிலங்களான மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம்  மற்றும் டெல்லிக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. 

தேங்காய் உறித்தபிறகு வீணாக உள்ள மட்டைகளை திண்டுக்கல் பகுதியில் உள்ள சிலர் வாங்கிச்சென்று மட்டையில் உள்ள நார் மற்றும் துகள்களைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். ஒரு   இயந்திரத்தில் பிரிக்கப்பட்ட நார்களைக் கொட்டி  பஞ்சுபோல் காற்றில் பறக்கும் அளவிற்கு மிருதுவான பொருளாக மாற்றுகின்றனர். இந்த  பணியில் எந்தவித ரசாயனக் கலவையும் சேர்க்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்னை நார் பிரிக்கப்படுகிறது.
தென்னை நார் பிரிக்கப்படுகிறது.திண்டுக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் 'காயர் பித்துகள்'

சிறிய அளவிலான மிருதுவான நார்கள் மெத்தைகள் தயாரிக்க பயன்படுகிறது. இவையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நார்களைப் பிரிக்கும்போது ஏற்படும் கழிவுகள் சிறுசிறு துகள்களாக மண் போல் வெளியேறுகிறது. இதைக்கொண்டு தான் ‘காயர் பித்’ துகள் தயாரிக்கப்படுகிறது. 

இந்த மண்போன்ற துகள்களை ‘ஹைட்லாரிக்’ முறையில் அழுத்தம் கொடுக்கப்பட்டு பெரிய பெரிய கட்டிகளாக தயாரிக்கின்றனர்.  இந்தக் கட்டிகள் கண்டெய்னர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பயணமாகின்றன. இந்த காயர் பித் துகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 

இதுகுறித்து தென்னை நார், காயர்பித் தயாரிக்கும் தொழில் செய்துவரும்  விஜயகுமார் கூறுகையில். " முழுக்க முழுக்க வெளிநாடுகளை நம்பியே இந்த தொழில் உள்ளது. நார்களை மெத்தைகள் தயாரிப்புக்காக சீனாவிற்கு அனுப்புகிறோம். ‘காயர் பித்’ துகள்  ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகிறோம். அங்கு தேவை அதிகம் உள்ளது. 

சில நாடுகளில் விவசாயத்திற்கு 'காயர் பித்துகள்' அதிகம் தேவைப்படுகிறது. திண்டுக்கல்லில் இருந்து சென்னை துறைமுகத்திற்குச் சென்று அங்கிருந்து கப்பல்களில் கண்டெய்னர் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு 'காயர் பித்' கட்டி 5 கிலோ வரை உள்ளது. 

கொரோனாவிற்கு முன் ஒரு கட்டி விலை ரூ.26 வரை விற்பனையானது. கொரோனா பாதிப்புக்கு முன் அனுப்பிய 'காயர் பித்துகள்' வெளிநாடுகளில் தேங்கியதால் அவை இன்னும் விற்றுத் தீரவில்லை. அதனால் விலை குறைந்து ஒரு கட்டி 'காயர் பித்' ரூ.15 வரை குறைந்துவிட்டது.  

கேரளா அரசு தென்னை நார்களை அதிகளவில் கொள்முதல் செய்து, ஆற்றுப்படுகைகளில் இருபுறமும் வைத்து தண்ணீர் வீணாகாமல் பாதுகாக், என பல திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. இதுபோன்ற தொழில் செய்பவர்களுக்கு கேரள அரசு ஆதரவு தருவது போல் தமிழ்நாடு அரசும் கொள்முதல் செய்து அரசு திட்டங்களுக்கு பயன்படுத்தினால் இந்த தொழில் மேலும் சிறந்த விளங்கும்" என்றார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in