உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விடமுடியாது: அரசு ஊழியருக்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி

இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விடமுடியாது: அரசு ஊழியருக்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி

அரசு வேலைக்காக போலி சாதிச்சான்று அளித்து இடஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என சாதிச்சான்று அளித்து 1982-ம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணிக்கு சேர்ந்தார். 1999-ம் ஆண்டு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் அவரது சாதிச்சான்று மாநில அளவிலான ஆய்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அவரது சகோதரரும், சகோதரியும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்த மாநில அளவிலான குழு, அவரது பழங்குடியினர் சாதி சான்றிதழை கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வுபெற்ற அவரது ஓய்வு கால பலன்களும் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தனது சாதிச்சான்றை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்ய சட்டபூர்வமானதல்ல எனக் கூறி பாலசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு, பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் இடஒதுக்கீட்டு கொள்கை பெருமைக்குரிய ஒன்று எனவும், அரசு வேலைக்காக இட ஒதுக்கீட்டு கொள்கையை துஷ்பிரயோகம் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் விடக்கூடாது எனக் கூறி, பாலசுந்தரத்தின் சாதிச்சான்று ரத்து செய்த உத்தரவை உறுதி செய்து, அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

போலி சாதிச்சான்றை கண்டறிய தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி, இடஒதுக்கீடு கொள்கையை துஷ்பிரயோகம் செய்ததை நியாயப்படுத்த முடியாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in