370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாகக் காஷ்மீர் செல்லும் மோடி!

எழுந்திருக்கும் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாகக் காஷ்மீர் செல்லும் மோடி!

ஏப்ரல் 24-ல் காஷ்மீர் செல்லவிருக்கிறார் பிரதமர் மோடி. ஜம்மு அருகில் உள்ள சாம்பா மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் முதன்முறையாகக் காஷ்மீர் செல்கிறார் மோடி.

பஞ்சாயத் ராஜ் தினம் கொண்டாடப்படும் நாளில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதற்கிடையே, காஷ்மீரில் உள்ளாட்சி உறுப்பினர்களைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவருகிறது. கடந்த மாதம் முதல் 4 உள்ளாட்சி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

2018 ஜூன் முதல் காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ல், 370-வது சட்டகூறு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரின் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் (Public Safety Act) பெயரால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு அந்த நிலைமை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. ஜூன் 24-ல் டெல்லியில் காஷ்மீரின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். கூடவே, காஷ்மீரிலும், ஜம்முவிலும் விரைவில் தேர்தல் நடத்த ஏதுவாக, அங்கு தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் 2021 ஜூனில் தொடங்கின.

இந்தச் சூழலில், தொகுதி மறுவரையறை ஆணையம் தனது அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

370-வது சட்டக்கூறை மீண்டும் கொண்டுவருவது, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, பிரிக்கப்பட்ட லடாக்கை மீண்டும் காஷ்மீருடன் சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் காஷ்மீர் அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகின்றன. அரசு அவற்றை நிறைவேற்றிய பின்னர் உடனடியாகத் தேர்தலையும் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சிகள் விரும்புகின்றன. வரும் டிசம்பரில் தேர்தல் நடக்கும் என்றே தெரிகிறது. எனினும், அதற்கு முன்னர் காஷ்மீர் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்திசெய்யப்படுமா என்பது முக்கியமான கேள்வி.

370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பின்னர் முடங்கிக்கிடந்த காஷ்மீரில் நிலைமையைச் சரிசெய்ய மத்திய அரசு படிப்படியான நடவடிக்கைகளை எடுத்தது. மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டது, இணையச் சேவை முடக்கத்தை நீக்கியது, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முக்கியத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டது எனத் தனது தரப்பில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காஷ்மீரில் ஓரளவுக்கு சுமுக நிலை திரும்ப வழிவகுத்தன.

2021 ஜூனில் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய காஷ்மீர் தலைவர்கள், காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மோடியும் அமித் ஷாவும் தெரிவித்தனர். எனினும், எப்போது அது சாத்தியமாகும் என்பதைப் பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை. காஷ்மீரியர்கள் மட்டுமல்லாமல் ஜம்முவில் வசிக்கும் மக்களும் (பெரும்பாலானோர் இந்துக்கள்) காஷ்மீர் - ஜம்மு இரண்டும் சேர்க்கப்பட்டு, மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அது நடக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

இதற்கிடையே, பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஷெபாஸ் ஷெரீஃப், பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'காஷ்மீர் உட்பட நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இத்தகைய சூழலில், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in