கள்ளக்குறிச்சி வன்முறைக்கு யார் காரணம்?- பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பகீர்

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு யார் காரணம்?- பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு பகீர்

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ. வேலு, “மாணவர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் ‘அமைப்பு’ என்ற பெயரிலிருந்து கொண்டு அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கி இருக்கிறார்கள். சமூக வலைதளம் என்ற பெயரில் தூண்டிவிட்டவர்கள், கலவரம் செய்தவர்கள் என அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் சேதமடைந்த பள்ளியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ. வேலு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, “சாலை மறியல் என்ற பெயரிலும் போராட்டம் என்ற பெயரிலும் சிறுசிறு சம்பவங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற்று இருக்கிறது. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கலந்து பேசி பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் இல்லாமல் அவர்கள் பணியைத் தொடர வேண்டியதற்கான பாதுகாப்பு கொடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் ஊராட்சியைச் சேர்ந்தவர்தான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்.

சம்பவத்தை கேள்விப்பட்டதும் அமைச்சர் அந்த அம்மையாரைச் சந்தித்தார். நடைபெற்ற சம்பவத்தின் அடிப்படையில் விசாரித்து அவருக்குப் பொருளாதார அடிப்படையில் உதவி செய்ய அமைச்சர் முன்வந்தார். ஆனால் அந்த அம்மையார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன் எனச் சொன்னதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அமைச்சரும் முடிவு செய்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் சமூகவலைதளம் என்ற பெயரில் மாணவர்கள் என்ற போர்வையில் பலபேர் கூடி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அப்போதும் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையிலும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றும் நிலையிலும் காவல்துறை நடந்து கொண்டது. அந்த தவறான செய்தியை கேள்விப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து சூழ்ந்து இப்படி கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் என்பது எல்லாம் ஜனநாயக முறையில் ஏற்கத்தக்கது. நீதி வேண்டும் என வந்தவர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கலாம். எதையும் செய்யாமல் 37 பள்ளி பேருந்துகள், கார்கள், டிராக்டர்கள், ஜேசிபி, காவல்துறை வாகனங்கள் என அனைத்தையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் எப்போது வழக்கு தொடர்ந்துவிட்டார்களோ, அதைத்தான் அரசாங்கம் உட்பட எல்லோரும் கேட்க வேண்டும். சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்கள் போன்றவை கொளுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் அமைப்பு என்ற பெயரில் நடத்திக் கொண்டு அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கி இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் காயம்பட்டாலும், 40 பேர் மட்டுமே சிகிச்சையிலிருந்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. உடற்கூறு ஆய்வுக்குப் பின்னால் யார் மீது தவறு இருந்தாலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளம் என்ற பெயரில் தூண்டிவிட்டவர்கள், கலவரம் செய்தவர்கள் என அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும் என நீதிபதி அவர்களே குறிப்பிட்டு இருக்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in