நிலாவில் இப்போது நேரம் என்ன?

நிலவு
நிலவு

உலக நாடுகளுக்கான நேர மண்டலங்கள் போன்று, நிலவுக்கும் என தனி நேர மண்டலத்தை நிர்ணயிக்க ஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமை முயன்று வருகிறது.

உலகின் எந்த மூலையில் வசிப்பவர் என்ற போதும், அவரவர் வசிப்பிடத்தை பொறுத்து தனி நேரங்களை கணிப்பதற்கு உபாயமுண்டு. இங்கிலாந்தின் கிரீன்விச் நகரம் ஊடாக செல்லும் பூஜ்ஜியம் டிகிரி தீர்க்கரேகையிலிருந்து, குறிப்பிட்ட நேர மண்டலத்தைக் குறிக்கும் தீர்க்கரேகை எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ, அதைப் பொறுத்து அந்த நேர மண்டலத்தின் நேரம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இது பூமியின் பல்வேறு நாடுகள் மத்தியிலான நேரத்தை கணிப்பதற்கு உதவுகிறது. எதிர்காலத்தில், அண்டை நாட்டுப் பயணம் போன்று, நிலவுக்கான பயணம் எளிதாகவுள்ள சூழலில், நிலவுக்கான தனி நேர மண்டலமும் அவசியம் அல்லவா?

நிலவுக்கு என தனியாக நேர மண்டலம் நிர்ணயிப்பது தொடர்பாக நீண்ட காலமாக அறிவியலாளர் மத்தியில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இன்னமும் எட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகளை தற்போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முடுக்கிவிட்டுள்ளது. இதன்படி நிலவு மட்டுமன்றி, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குமான நேர மண்டலங்கள் நிர்ணயிக்கப்பட இருக்கின்றன.

பூமியில் இருப்பதைவிட நிலவில் நேரம் சற்று விரைவாக ஓட்டமெடுக்கும். அதுபோலவே நிலவின் பரப்புக்கும், அதன் சுற்றுவட்டப் பாதைக்கும் வெவ்வேறு நேர மண்டலங்கள் தேவைப்படுகின்றன. தற்போதைக்கு அணு ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட கடிகாரங்கள் வாயிலாக விண்வெளியில் நேரம் கணிக்கப்பட்டு வருகிறது. நேர மண்டலம் நிர்ணயிக்கப்படுவதன் வாயிலாக, பல்வேறு நாடுகள் மத்தியிலான ஆய்வுகளை ஒப்பிடவும் அவற்றை ஒருங்குவித்து ஆராயவும் உதவியாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்தில் கூடிய சர்வதேச விண்வெளி ஆய்வுக்கான ஆலோசனைக் கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக சர்வதேச நாடுகள் மத்தியிலான ஒருமித்த முடிவை எட்டுவதற்கான முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in