எரிபொருள் விலையைக் குறைக்க எத்தனால் தீர்வாகுமா?

களநிலவரங்கள் விடுக்கும் எச்சரிக்கைகள்
எரிபொருள் விலையைக் குறைக்க எத்தனால் தீர்வாகுமா?

பெட்ரோல், டீசல் விலை இன்று (அக்.7) மீண்டும் உயர்ந்துவிட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய விலை நேற்று உயர்ந்ததை அடுத்து, இந்த விலையேற்றம் என்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் சாமானியர்கள்தான் இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெட்ரோல், டீசலுக்கு வெளிநாட்டு இறக்குமதியையே பெரிதும் நம்பியிருக்கும் இந்தியாவில் போதிய எண்ணெய் வளம் இல்லை. எனவே, மாற்று எரிபொருளைத் தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி, சமீபத்தில் அதிகம் பேசப்படுவது எத்தனாலைத் தயாரித்து அதைப் பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தலாம் என்பதுதான். இதனால் இறக்குமதிச் செலவும் காற்று மாசும் குறையும்; விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும் என்று வாதிடப்படுகிறது.

கேட்பதற்குத் தேனாக இருக்கும் இந்த யோசனை, ஏழைகளுக்கு உணவு தானியங்களை எட்டாக்கனியாக்கிவிடும் என்ற பயங்கரம் பலரால் உணரப்படவில்லை. குறிப்பாக, அரசு இதைக் கண்டுகொள்ள மறுக்கிறது!

எதனால் நல்லது எத்தனால்?

எத்தனாலைத் தயாரிப்பது எளிது, தயாரிப்புச் செலவு குறைவு, எத்தனாலைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாது. அதாவது பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் காற்றில் கலக்கும் அளவுக்கு மாசு, எத்தனாலை (எரிபொருளாக முழுமையாகவோ, கலந்தோ) பயன்படுத்தினால் ஏற்படாது. புவி வெப்பமடைவதைக் கணிசமாகக் குறைக்கலாம். எல்லா நாடுகளாலும் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். இதனால் பெட்ரோல் – டீசலையே நம்பியிருப்பதைக் குறைத்துக்கொள்ளலாம். எத்தனால் தயாரிப்புக்கு உள்ளூரிலேயே ஆலைகளை ஏற்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பையும் அதிகப்படுத்தலாம்.

வேளாண் துறைக்கு மேலும் வருமானம் கிடைக்கும். எத்தனால் எடுக்கக்கூடிய வேளாண் பொருட்களின் சாகுபடியை அதிகப்படுத்தலாம். எத்தனாலில் இருந்து ஹைட்ரஜனைக்கூட தயாரிக்கலாம். இது புதுப்பிக்கத்தக்க நல்லதொரு எரிபொருள் என்று இதை ஆதரிப்போர் பட்டியலிடுகின்றனர்.

எத்தனாலாகத் தயாரித்த பிறகு வேண்டுமானால் சுற்றுச்சூழல் மாசை அது குறைக்கலாம். ஆனால், எத்தனாலைத் தயாரிக்கும் சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு நிச்சயம் மாசு ஏற்படுத்துபவைதான்.

எத்தனால் தயாரிப்பில் உள்ள சிக்கல்கள்

எத்தனாலைத் தயாரிக்க உதவும் வேளாண் பொருட்களான சோளம், கரும்பு, சிறு தானியங்கள், பார்லி, கோதுமை, அரிசி, ஓட்ஸ் போன்றவற்றைச் சாகுபடி செய்ய அதிக நிலப்பரப்பு தேவை. இவற்றில் சில, தண்ணீரை அதிகம் குடிக்கும் பயிர்கள் என்பது இன்னொரு விஷயம்.

எத்தனாலாகத் தயாரித்த பிறகு வேண்டுமானால் சுற்றுச்சூழல் மாசை அது குறைக்கலாம். ஆனால், எத்தனாலைத் தயாரிக்கும் சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு நிச்சயம் மாசு ஏற்படுத்துபவைதான். எத்தனால் தண்ணீரை அதிகம் உறிஞ்சக்கூடியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு முக்கிய உணவாகக் கூடிய விளைபொருட்களை எத்தனால் பயன்பாட்டுக்குத் திருப்பிவிட்டால், அது பற்றாக்குறையைத்தான் ஏற்படுத்தும். இதனால் விலைவாசி உயரும். ஏழைகளுடைய வாழ்க்கை நிலை மேலும் மோசமாகிவிடும். அமெரிக்காவில் சோயா மொச்சையை இப்படி எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிட்டார்கள். சோயா மொச்சையை நேரடியாக மனிதர்கள் சாப்பிடுவது அதிகம் இல்லை என்றாலும், கால்நடைகளுக்கு அது முக்கியமான தீனி. எத்தனால் உற்பத்தி எனும் பெயரில் சோயா மொச்சைக்கு திடீர் கிராக்கி அதிகமானதால், அதனுடைய விலை அதிகமானது. இதனால் கால்நடை வளர்ப்போர், பண்ணைகளை நடத்துவோர் மாற்று தீனி கிடைக்காமல் அல்லாடினர். வேறெதுவும் கிடைக்காததால், அதிக விலைக்கு சோயா மொச்சையை வாங்கினர். இதன் விளைவு அந்தக் கால்நடைகள், இறைச்சி ஆகியவற்றின் விற்பனை விலையிலும் எதிரொலித்தது. ஏழைகளால் வாங்க முடிந்த ஒரு பண்டம் அவர்களுடைய கையைவிட்டு போகத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் காரணங்களால், எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று பலரும் கருதுகின்றனர். ஏழைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் தானியங்களைத் திருப்பிவிடக் கூடாது என்றால், கரும்பு போன்றவற்றைத் திருப்பினால் என்ன என்று கேட்கக் கூடாது. கரும்புக்கு ஏற்கெனவே அதிகத் தண்ணீரை இறைத்து, நிலத்தடி நீரை வற்றச் செய்துவருகிறோம். கரும்பைச் சர்க்கரையாக்கி அந்தச் சர்க்கரையை உபரி என்று அறிவித்து, அதை எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்துவதைப் போல வேலையற்ற வேலை வேறெதுவும் இருக்க முடியாது. எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குக் கரும்பு சாகுபடியை அனுமதித்துவிட்டு, பிற பயிர்களைச் சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு ஆலோசனைகளைக் கூற வேண்டும்.

கள்ள மவுனம் காக்கும் அரசு

இந்தியாவில் தண்ணீரை அதிகம் வீணடித்து, அதில் கிடைக்கும் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது என்று சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் விற்பது, தண்ணீரையும் சேர்த்து விற்பதற்குச் சமம். அரசும் சரி, அதிகாரிகளும் சரி இந்த உண்மைகளை விவசாயிகளிடத்தில் கூறுவதில்லை. சர்க்கரை உற்பத்தியில் உபரி, ஏற்றுமதி என்கிற செய்திகளைப் படித்து இறுமாப்பு அடைகிறோம். உண்மையில் நாம் அதில் பலவிதங்களிலும் நஷ்டப்படுகிறோம். நிலத்தடி நீர் மட்டம் சரிந்துவிட்டால் மழை நீர் சேகரிப்பு, காடு வளர்ப்பு ஆகியவற்றை முழு அக்கறையுடன் மேற்கொண்டால்கூட மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர பல ஆண்டுகள் பிடிக்கும்.

‘இன்னும் சில ஆண்டுகளில் குடிப்பதற்கே குடிநீர் இல்லாமல் மக்கள் வாட நேரும்’ என்று ஐநா சபையின் உணவுப் பாதுகாப்பு அமைப்பு தொடர்ந்து எச்சரிக்கிறது. எந்த நாடும், மக்களும் அதைக் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. காவிரி டெல்டாவில் நாற்றங்கால்களை வளர்க்க லாரியில் தண்ணீர் கொண்டுவருவது செய்தியல்ல - எச்சரிக்கை. இப்போது பொது விநியோக முறையில் அரிசி, வட இந்தியாவில் கோதுமை ஆகியவற்றை அரசு மானியம் தந்து வழங்குகிறது. இதனால் அதன் உண்மையான உற்பத்திச் செலவு எவருக்குமே மனதில் பதியவில்லை. அந்த மானியமும் மக்களுடைய வரிப் பணத்திலிருந்து கொடுப்பதுதான். கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்குச் செய்ய வேண்டிய பணத்தை அரசுகள் மானியங்களாகப் பல இனங்களில் வீணடிக்கின்றன.

அரசின் விபரீத முடிவு

இந்தியாவில் 2025-க்குள், மொத்த எரிபொருள் தேவையில் 20 சதவீதம் உள்நாட்டு எத்தனால் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதற்காக எத்தனால் தயாரிப்பு ஆலைகளுக்கு நிதி வசதியும், சுற்றுச்சூழல் துறையிடமிருந்து விரைந்து தடையில்லாச் சான்றிதழும் தருவதாகக் கூறியிருக்கிறது. இப்போதே மத்திய உணவுக் கழகமும் மாநிலங்களின் பொது விநியோக அமைப்பும் கெட்டுப்போன, புழுத்த தானியங்களை எத்தனால் தயாரிப்போருக்கு மலிவு விலைக்குக் கொடுக்கின்றன. வீணாகப் போவதைத் தயாரித்தால்தான் என்ன என்று கேட்கலாம். அது தானாக வீணாவதில்லை, வீணடிக்கப்பட்டே இப்படி தரப்படுகிறது.

தானியங்களை மேலும் விலை குறைத்தோ அல்லது விலையில்லாமலோ ஏழைகளுக்கு வழங்குவதன் மூலம் அரிய மனித வளத்தைக் காப்பதுடன் சமூகத்தில் அமைதியையும் ஏற்படுத்த முடியும். சாப்பிடும் பண்டத்தை வாகன எரிபொருளுக்குப் பயன்படுத்துவதைவிட, பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து தனிப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். கடலோர படகு, கப்பல் போக்குவரத்தில் கவனமே செலுத்தாமல் சாலையில் பெட்ரோல் – டீசல் வாகனங்களை கணக்கின்றி ஓடவிடும் நிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். ரயில்கள் இப்போது பெருமளவுக்கு மின்சாரத்தில் ஓடுகின்றன. ரயில் பாதைகளையும் ரயில் நிலையங்களையும் குறுகிய தொலைவு ரயில்களையும் அதிகப்படுத்தியும் பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

மின்சார வாகனங்களையும் ஊக்குவிப்பதில் அரசு அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கூடவே, எத்தனால் பயன்பாட்டையும் கொண்டுவரும் முயற்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

2018 புதுப்பிப்பு எரிபொருள் கொள்கையின்போது வைக்கோல், கோரை, வீணாகும் காய்கறி, பழக் கழிவுகள் போன்றவற்றிலிருந்தும் ஆல்கே போன்ற பாசிகளிலிருந்தும் எத்தனால் தயாரிப்பது குறித்துத்தான் பேசப்பட்டது. அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது கோதுமை, அரிசி, சர்க்கரையிலிருந்து எத்தனால் தயாரிக்க முற்படுவது சரியல்ல. சுற்றுச்சூழலைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு வேறு வகையில் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வழிமுறைகளில் இறங்குவது நல்லதல்ல. அரசு எதைச் செய்தாலும், ‘இதனால் ஏழைகள் பாதிக்கப்படுவார்களா?’ என்று முதலில் ஆராய்ந்தாக வேண்டும் என்பார்கள். எத்தனால் விஷயத்திலும் அரசு இதைப் பின்பற்றியே ஆக வேண்டும்!

Related Stories

No stories found.