வவுனியா சிறையிலிருந்து தப்பியவர் மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சம்!

மண்டபம் முகாமில் தஞ்மடைந்த சிந்துஜன்
மண்டபம் முகாமில் தஞ்மடைந்த சிந்துஜன்

இலங்கை வவுனியா சிறையில் இருந்து தப்பியவர் இரண்டு நாட்களுக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் இன்று தஞ்சமடைந்தார்.

இலங்கை மன்னார் மாவட்டம், தோட்டவெளி ஜோஸப் வாஸ் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சிந்துஜன். இலங்கையில் போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணைக்காக போலீஸார் அவரை அழைத்து சென்றபோது கை விலங்குடன் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது செல்வராஜ் உடன் பிப்.19-ம் தேதி இவர் மர்மப்படகு மூலம் தனுஷ்கோடி வந்ததாக கூறப்படுகிறது.

இதில் செல்வராஜ் மட்டும் ராமேஸ்வரம் டவுன் போலீஸில் தஞ்சமடைந்தார். இவரது முரண்பட்ட பதிலால் போலீஸார் சந்தேகமடைந்தனர். இது தொடர்பாக உளவுத்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் செல்வராஜ் மகன் சிந்துஜன், மண்டபம் அகதிகள் முகாமில் இன்று தஞ்சமடைந்தார். அங்கு க்யூ பிரிவு போலீஸார் விசாரணையில், போதைப்பொருள் வழக்கில் கைதாகி வவுனியா சிறையில் இருந்து விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீஸார் பிடியில் இருந்து தப்பியது தெரியவந்தது. பிப்.19-ல் வந்து 2 நாட்களுக்கு பின் தஞ்சமடைந்த இவரிடம் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in