கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயம்: போலீஸ் வேட்டையில் 1,200 லிட்டர் அழிப்பு

கள்ளச்சாராய ஊறல்
கள்ளச்சாராய ஊறல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில்  கள்ளச்சாராய வேட்டை நடத்திய காவல்துறையினர்,  1,200 லிட்டர் அளவுக்கு  கள்ளச்சாராய ஊரல்களை கண்டுபிடித்து அழித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில்  ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள்  மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில்  கரியாலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (தனிப்பிரிவு) ராமலிங்கம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்கள் நேற்று  கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குரும்பலூர் பெஞ்ச்  ஆற்றில்  500 லிட்டர் கொள்ளவு கொண்ட மூன்று  பேரல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். 

கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் அவற்றில் இருந்தது.  அதிலிருந்த மொத்தம் 1,200 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் வெல்லம் 300 கிலோ ஆகியவற்றை  கண்டுபிடித்த காவல்துறையினர் அந்த  இடத்திலேயே கொட்டி அழித்தனர். மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றிற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in