உள்ளாட்சி அமைப்புகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாடுங்கள்: தமிழக அரசு உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாடுங்கள்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நாளை (ஜன.13) சமத்துவ பொங்கல் கொண்டாட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கல் விழா தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் தமிழர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும், இப்பாரம்பரிய விழா ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவை சுகாதாரப் பொங்கல், சமத்துவப் பொங்கல் நாளை (ஜன.13) கொண்டாட வேண்டும். இந்நிகழ்வில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களை பங்கேற்பு செய்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டடங்களை தூய்மை செய்ய வேண்டும். அனைத்து தெருக்கள், அனைத்து கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்ய வேண்டும். கிராமத்தை தூய்மைப்படுத்தி சுகாதாரப் பொங்கல் கொண்டாடும் வண்ணம் பணிகள் செய்து முடிக்க வேண்டும். கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி  பெருமைப்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குவோர் உள்ளிட்ட ஊராட்சி அலுவலர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in