இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ அறிவித்த ஜாக்பாட்!

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ அறிவித்த ஜாக்பாட்!

இந்திய கிரிக்கெட் வீரர்களைப் போன்று மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ திடீரென அறிவித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை ஆண்கள் கிரிக்கெட் விளையாட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மகளிர் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் அதிக அளவில் பார்க்காதே காரணம் என்று கூறப்பட்டாலும் வீராங்கனைகள் தங்கள் திறமைகளை நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை போன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த ஏற்றத்தாழ்வு பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது.

தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகின்றனர். பல முக்கிய போட்டிகளில் விளையாடி கோப்பைகளை கைப்பற்றினர். அண்மையில் மகளிர் ஆசிய கிரிக்கெட் கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. இந்த நிலையில் பிசிசிஐ மனதில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, "பாகுபாட்டை களைவதற்காக பிசிசிஐ முன்னெடுத்துள்ள முதற்படியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு சம ஊதிய கொள்கையை அமல்படுத்துகிறோம். பாலின சமத்துவத்திற்கான புதிய சகாப்தத்திற்குள் இந்திய கிரிக்கெட் நுழைவதால் இனி கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் இரு தரப்புக்கும் போட்டி ஊதியம் சமமாக வழங்கப்படும்" என்றார்.

பிசிசிஐ-யின் இந்த திடீர் நடவடிக்கை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in