போராட்டத்தை தூண்டி விடுவதாக முகிலன் கைது: கணவரின் உடலை வாங்க மனைவி சம்மதம்

குண்டுக்கட்டாக கைது செய்யப்படும் முகிலன்
குண்டுக்கட்டாக கைது செய்யப்படும் முகிலன்

கல்குவாரி உரிமையாளரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜெகநாதன் உடலை வாங்க மறுத்து நடைபெறும்  போராட்டத்தை தூண்டி விடுவதாக முகிலன்  உள்ளிட்ட  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், குப்பம் அருகேயுள்ள காளிபாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஜெகநாதன் (49)  கடந்த 10-ம் தேதி இருசக்கர வாகனத்தில்  சென்றபோது அப்பகுதியைச்சேர்ந்த கல்குவாரி  வேன் மோதி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து  குவாரி உரிமையாளர் செல்வக்குமார் (39), வேன் ஓட்டுநர் சக்திவேல் (24), கல்குவாரி ஊழியர் ரஞ்சித் (44) ஆகிய 3 பேரை  கைது செய்தனர்.   

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஜெகநாதனின் உடல் கடந்த 11-ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஜெகநாதன் குடும்பத்துக்கு 1 கோடி இழப்பீடு  மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கவேண்டும் எனக்கூறி கடந்த 4 நாட்களாக  சடலத்தை பெற மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க  ஒருங்கிணைப்பாளர் ரா.சா.முகிலன், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்  ந.சண்முகம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று முன்தினம் ஜெகநாதன் குடும்பத்தினர்,  தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா.சா.முகிலன், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை  நடத்தினார்.  ஜெகநாதன் மனைவி ரேவதியிடம் ஆட்சியரின் சுயவிருப்ப நிதியில் இருந்து 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இருப்பினும் அவர்கள் சடலத்தை பெற்றுக் கொள்ளாமல்  போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், போராட்டத்தை தூண்டி விடுவதாகக்கூறி சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்  ந.சண்முகம்,  தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்  ரா.சா.முகிலன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தம் கணவரை லாரி மோதி கொன்றதோடு  மட்டுமல்லாமல் அரிவாள்  உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுவதால் அவரது உடலை தனது முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தி அதன் வீடியோ பதிவை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆட்சியர் அழகை ஏற்றுக் கொள்ளவில்லை.  எனினும் கணவரின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்து ரேவதி கையெழுத்திட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in