டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து

டி20 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் ஐசிசி டி20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. போட்டி இந்திய நேரப்படி 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ரிஸ்வான் 15 ரன்களில் சாம் கரண் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ஹாரிஸ் 8 ரன்களில் ரஷீத் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து மசூத் களமிறங்கி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ஸ்கோர் 84 ஆக இருந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களில் அவுட் ஆனார். அவர் ரஷீத் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய இப்திகார் டக் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் அணி 85 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து ஷதாப் கான் களமிறங்கி சற்று அதிரடி காட்டினார். இருப்பினும் 20 ரன்களில் அவர் ஜோர்டன் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த நவாஸ் 5 ரன்களில் சாம் கரண் பந்தில் லிவிங்ஸ்டோன் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த வாசிம் 4 ரன்களில் வெளியேறினார். அவர் ஜோர்டன் பந்தில் லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதனையடுத்து வந்த ஷாகீன் அப்டிரி 5 ரன்களிலும், ரவுஃப் 1 ரன்னிலும் இருக்கும்போது பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில், சாம் கரண் 3 விக்கெட்களையும், ரஷீத் மற்றும் ஜோர்டன் தலா 2 விக்கெட்களையும், ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங்கைத் தொடங்கியது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் ஓவரின் கடைசிப் பந்திலே 1 ரன்னில் வெளியேறினார். அவரை ஷாகீன் அப்ரிடி போல்டாக்கினார். ஒருபுறம் பட்லர் அதிரடி காட்ட, மறுபுறம் களமிறங்கிய சால்ட் நிதானமாக விளையாடினார். 10 ரன்கள் எடுத்தப்போது சால்ட் அவுட் ஆனார். அவர் ரவுப் பந்தில் இப்திகாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் பட்லருடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். பட்லர் 26 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரவுப் பந்தில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

ஆனால் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸும் விக்கெட்டை இழக்காமல் ஆடினார். 16-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். 17-வது ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகளை விளாசினார். அதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது. 19-வது ஓவரில் அதிரடியாக விளையாடி வந்த மொயின் அலி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 19-வது ஓவரின் கடைசிப் பந்தில் பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். இதனால் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்கமில்லாமல் இருந்தார்.

நான்கு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாம் கரண் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அத்துடன் இந்த உலக கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியதால் தொடர் நாயகன் விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இங்கிலாந்து அணி வெல்லும் 2-வது டி20 உலகக்கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in