பேன்ட் அணியாது ‘ஃபன்’ பண்ணுவோம்!: ஆண் - பெண் அட்டகாசத்தின் பின்னணி என்ன?

பேன்ட் அணியாது ‘ஃபன்’ பண்ணுவோம்!: ஆண் - பெண் அட்டகாசத்தின் பின்னணி என்ன?

இடுப்புக்கு மேலே எப்போதும்போலான கனவான் தோற்றத்துக்கான ஆடைகள். இடுப்புக்கு கீழே வெறும் உள்ளாடை மட்டுமே. இப்படி ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் ரயில் பயணிகள் அதகளம் செய்கிறார்கள். உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நிகழும் இந்த கூத்தும் அவற்றின் பின்னணியும் அடடே ரகம்.

சினிமாவில் ஞாபக மறதி கதாபாத்திரங்களை இப்படித்தான் காட்சியாக்குவார்கள். இடுப்புக்கு மேலே திருத்தமாகவும், இடுப்புக்குக் கீழே ஏடாகூடமாகவும் உடுத்தியவாறு அந்த ஞாபக மறதி பேர்வழி, பொதுவெளியில் புகுந்து களேபரம் செய்வார். இதையே மறக்காது ஆண்டுதோறும் குழுவாக அரங்கேற்றி வருகிறார்கள். உலகம் முழுக்க இந்த வேடிக்கை நடவடிக்கைக்கு அபிமானிகள் உண்டு. அனைவரும் தன்னார்வலர்கள் மட்டுமே. பொது அழைப்பின் பேரில் அன்று ஒரு பயண தருணத்தில் மட்டுமே கூடி, அரை நிர்வாணக் கூத்தை அரங்கேற்றி கலைவார்கள்.

இதன்படி, இடுப்புக்கு மேலாக எப்படி வேண்டுமானாலும் உடுத்திக்கொள்ளலாம். இடுப்புக்கு கீழே பொதுநலன் கருதி உள்ளாடை மட்டுமே இருக்க வேண்டும். நடமாட வசதியாக காலணிகளுக்கு விதிவிலக்கு. சப்வே ரயில் பயணங்களில் இப்படி கூடி இயல்பாக பயணிக்கிறார்கள். வழக்கம்போல புத்தகம் வாசிக்க, இசை கேட்க, சக பயணிகளுடன் அரட்டையடிக்க செய்கிறார்கள். வாட்டும் குளிரிலும் இயல்பாக கடக்கிறார்கள். முக்கியமாக கண்ணியம் காக்கிறார்கள்.

அரையில் உருப்படியான ஆடை இல்லை என்பதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. இதில் ஆண் பெண் பேதமும் கிடையாது. பார்ப்பவர்கள் முகத்தில் குறைந்தபட்சம் ஒரு முறுவலையேனும் உத்திரவாதமாக பெறுகிறார்கள். இவர்கள் யார் இவர்களின் நோக்கம் என்ன என்றால் ’சும்மா’ என்பதுதான் பதிலாக இருக்கும். ’பேன்ட் கழட்டுறோம் ஃபன் பண்றோம்’ என்பதற்கு அப்பால் இவர்களிடமும் சொல்வதற்கு எதுவுமில்லை.

20 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த கூத்து முதல் முறையாக அரங்கேறியது. தினசரி அதே பயணம், அதே வேலை, அதே வாழ்க்கை என அலுத்துக்கொண்ட நண்பர்கள் குழு ஒன்று இதனை ஆரம்பித்து வைத்தது. குறிப்பிட்ட நாளை ஒதுக்கி அன்றைய பயணத்தின்போது மட்டும் பேன்ட் துறந்தார்கள். ’நோ பேன்ட் சப்வே ரைட்’ மற்றும் ’நோ ட்ரௌசர்ஸ் டே’ என்றெல்லாம் தாங்களாக பெயர் வைத்துக்கொண்டார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வேடிக்கை ஆண்டுக்கொரு முறை திடீரென அரங்கேறும். விருப்பமுள்ளோர் இதில் பங்கேற்கலாம்.

அலுப்பும் சலிப்புமான இயந்திர வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தருணத்தில் சுவை சேர்க்கவும், சக மனிதர்களை புன்னகைக்கச் செய்வதும், ச்சும்மா ஒரு மாறுதலுக்காகவும் மட்டுமே இந்த வேடிக்கை நிகழ்த்தப்படுகிறது. மனிதர்களை அழுத்தும் பிரச்சினைகள், செக்குமாடு வாழ்க்கை, எதையோ துரத்திக்கொண்டு ஓடும் சாமனியர்களின் தடுமாற்றங்கள் என சகலமானவற்றையும் துச்சமாக்கி நகைக்கும் கட்டுடைப்பு முயற்சியே இது. கரோனா காரணமாக தடைபட்டுப்போயிருந்த இந்த வேடிக்கை வைபவம், இங்கிலாந்தில் தற்போது மீண்டும் அரங்கேறி இருப்பதே, இப்போது புகைப்படங்களாக வெளியாகி உலகையே முறுவலிக்கச் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in