தாத்தா பிறந்த பாகிஸ்தான் மண்ணில் விளையாடுகிறார் இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி

தாத்தா பிறந்த பாகிஸ்தான் மண்ணில் விளையாடுகிறார் இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி

நாளை தொடங்கும் டி 20 போட்டியில் தனது பூர்வீக மண்ணான பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி விளையாடுகிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. அங்கு ஏழு டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி விளையாட உள்ளது. இத்தொடர் நாளை(செப்.20) முதல் அக்.2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சென்றுள்ளதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. கராச்சியில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலி தலைமை தாங்குகிறார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தாத்தா பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தில் குடிபெயர்ந்தவர். தனது தாத்தா பிறந்த பாகிஸ்தானில் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலி தலைமையேற்று விளையாடுவது வரலாற்றில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மொயின் அலி கூறுகையில், ”இங்கிலாந்து அணி வீரராக பல வெளிநாட்டுப் பயணங்களைச் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, ஆனால் இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாகிஸ்தான் மக்கள் முன்னிலையில் விளையாடுவது மறக்கமுடியாதது. எனது கிரிக்கெட் பயணம் ஆசிய பாரம்பரியத்திலிருந்து வந்தது. ஜோஸ் பட்லர் காயத்தில் இருந்து மீண்டு வரும் வேளையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக களமிறங்குவதை பெரிய கவுரவமாக பார்க்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in