பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு

நீட் தேர்வு முடிவு வெளியாகாததால் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஆக.25) தொடங்குவதாக இருந்தது. ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பொறியியல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குவதாக இருந்தது. நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும்.

இந்த கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்திருக்கிற காரணத்தால், இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. முதலில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ முடிவுகள் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால், ஏற்கெனவே கொடுத்திருந்த கால அவகாசத்திற்கு பின் 5 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தோம்.

தற்போதும் நீட் தேர்வு முடிவுகள் முதலில் வரும் என்று நினைத்தோம். ஆகஸ்ட் 21-ம் தேதி முடிவுகள் வரும் என்று கூறினார்கள். ஆனால் இன்னும் வெளியிடாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானால், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பலர் அங்கு சென்றுவிடுவார்கள். அதனால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு பல்வேறு இடங்கள் காலியாக இருந்தன" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in