அடுத்த மாதம் திருமணம்; ரயிலில் பறிபோன பொறியாளரின் உயிர்: நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்க சென்றபோது சோகம்

அடுத்த மாதம் திருமணம்; ரயிலில் பறிபோன பொறியாளரின் உயிர்: நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்க சென்றபோது சோகம்

தன் கல்யாண அழைப்பிதழை நண்பர்களுக்குக் கொடுக்க ரயிலில் சென்ற கல்யாண மாப்பிள்ளை, ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகன் கிறிஸ்டியன் டேனியல்(25) பொறியாளராக உள்ளார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்துவந்த டேனியலுக்கு, பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடப்பதாக இருந்தது. திருமணத்திற்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டதும், தன் நண்பர்களுக்கு அழைப்பிதழை கொடுக்க முடிவு செய்தார் டேனியல்.

‘வொர்க் ப்ரம் ஹோமில்’ இருந்த டேனியல் திருமண அழைப்பிதழ்களைக் கொடுப்பதற்காக நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தன் திருமண அழைப்பிதழ்களுடன் சென்றார். மதுரை தேனூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது சாப்பிட்டுவிட்டு கை கழுவச் சென்ற டேனியல் ரயில் குலுங்கும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதுபற்றி ரயிலில் இருந்த சக பயணிகள் கொடுத்தத் தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் விரைந்து சென்றனர். ஆனால் டேனியல் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து டேனியலின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

கன்னியாகுமரியில் இருந்து தன் திருமண அழைப்பிதழோடு சென்னைக்கு சென்ற பொறியாளர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in