சீன நிறுவனங்கள் மீது இறுகும் பிடி... விவோ செல்போன் நிறுவனத்தின் 44 இடங்களில் ரெய்டு!

சீன நிறுவனங்கள் மீது இறுகும் பிடி... விவோ செல்போன் நிறுவனத்தின் 44 இடங்களில் ரெய்டு!

பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சீனாவின் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் அது தொடர்பான 44 இடங்களில் அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று சோதனை நடத்தி வருகிறது.

நூற்றுக்கணக்கான கோடிகள் வரி ஏய்ப்பு செய்ததற்கான உளவுத்துறை ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்துவதாக சொல்லப்படுகிறது. பணமோசடி மற்றும் வருமானத்தை குறைவாக காட்டிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் தொடர்பாக விவோ நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பரில் விவோ, ஒப்போ, ஜியோமி மற்றும் ஒன்பிளஸ் உள்ளிட்ட சீன செல்போன் நிறுவனங்களின் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.

அப்போது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாகக் ஜியோமியின் இந்தியத் தலைவர் மனு ஜெயின் மத்திய நிறுவனத்தால் விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கோடு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஜியோமியின் வங்கிக் கணக்குகளும் இணைக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதுபோல கடந்த ஆகஸ்டிலும் சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு விற்பனையாளர் ZTE மற்றும் அதன் நிறுவன அலுவலகம் உட்பட ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் இந்திய அரசு கடந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது. அதுபோல இந்தியாவில் இயங்கிவரும் சீன நிறுவனங்கள் மீதானப் பிடியையும் மத்திய அரசு இறுக்கி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in