50 கிலோ இனிப்புகள் வாங்க வேண்டும்; ஊழியர்களை கட்டாயப்படுத்தும் ஆவின்: முதல்வருக்கு சென்ற கடிதம்!

50 கிலோ இனிப்புகள் வாங்க வேண்டும்; ஊழியர்களை கட்டாயப்படுத்தும் ஆவின்: முதல்வருக்கு சென்ற கடிதம்!

தீபாவளி விற்பனையில் இலக்கை அடையும் நோக்கில் ஆவின் நிறுவன ஊழியர்களையும்,  வாகன ஓட்டுநர்கள்,  முகவர்களையும்  இனிப்பு வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

இது குறித்து அச்சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி தமிழக முதல்வருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு ஐந்து வார காலத்திற்கு மேல் பணப்பட்டுவாடா செய்யப்படாமல் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது.  பல்வேறு கல்வி, தொழில் நிறுவனங்களுக்கும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் செய்த வகையில் ஆவினுக்கு வர வேண்டிய பலகோடி ரூபாய் வசூல் செய்யப்படாமல் உள்ளது. 

அவை  வாராக்கடனாக விட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் தரப்பில் அதனை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக கோவை ஒன்றியத்தில் மட்டும் 31.03.2022 கணக்கின்படி பல்வேறு கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் செய்த வகையில் கடந்த 3 வருடமாக சுமார் 4 கோடியே 45 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்படாமல் தற்போது வரை அந்த தொகை நிலுவையில் இருப்பதும்,  அந்த தொகையை வசூலிக்க தற்போதைய பொது மேலாளர் ராமநாதன் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து வருவதாகவும்  சொல்லப்படுகிறது.

அது அப்படியிருக்க  தீபாவளிக்கு சுமார் 270 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்ய வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர்  நாசர்  இலக்கு நிர்ணயம் செய்திருப்பதால் 50 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யும் பால் முகவர்களையும், ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களையும், பால் விநியோகம் செய்யும் வாகன ஒப்பந்ததாரர்களையும் கூட விட்டு வைக்காமல் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 50 கிலோ ஆவின் தீபாவளி இனிப்புகள் வாங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுத்துகிறார்கள். 

கோவை ஒன்றிய ஆவினில் பால் மற்றும் பால் பொருட்கள் கொள்முதல் செய்யும் பால் முகவர்கள் அதற்குரிய தொகையை செலுத்த பயன்படுத்தி வந்த இணையதள வசதியை தீபாவளி இனிப்புகள் விற்பனை செய்ய நிர்பந்தம் செய்வதற்காக 20-ம் தேதி (இன்று) முதல் 22-ம் தேதி வரை பயன்படுத்த முடியாமல் ஆவின் நிர்வாகம் முடக்கி வைத்துவிட்டு ஒவ்வொரு பால் முகவர்களும் நேரில் வந்துதான் பணம் செலுத்தி ஆர்டர் போடவேண்டும் என குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்துள்ளனர்.

தீபாவளி இனிப்புகள் விற்பனை செய்ய நிர்பந்தம் செய்யும் ஆவின் நிர்வாகத்தின் இந்த சுயநலமிக்க செயல்பாடுகளால் பால் முகவர்கள் மட்டுமின்றி பால் உற்பத்தியாளர்கள், விநியோக வாகன ஒப்பந்ததாரர்கள் என பல்வேறு தரப்பினரும் கோவை ஒன்றியத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்களை கட்டாயப்படுத்தி வாங்க நிர்பந்தம் செய்து வரும் பொதுமேலாளர்கள், துணைப் பொதுமேலாளர்கள் மற்றும் வட்டார அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

கோவை ஒன்றியம்  உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் செய்து கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வசூலாகாமல்  நிலுவையில் உள்ள  தொகையை சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் எவராக இருந்தாலும் அவர்களின் ஊதியத்தில்  பிடித்தம் செய்து ஆவினுக்கான வாராக்கடனை நேர்செய்ய நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்.

ஆவின் தீபாவளி இனிப்புகள் விற்பனையை அரசின் பொதுத்துறை மற்றும் அரசு துறை அலுவலகங்களுக்கும், தனியார் நிறுவன அலுவலகங்களுக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாக இயக்குநருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் உத்தரவிட வேண்டும்" என்று தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in