நம்பிய நிறுவனத்தை நட்டாற்றில் விட்ட ஊழியர்: 1.37 கோடியோடு எஸ்கேப்

விவேக்.
விவேக்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவன ஊழியர் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டிய 1.37 கோடி ரூபாயோடு தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிரிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆக்ராவில் பண விநியோக சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுல்தான்புரா பகுதியைச் சேர்ந்த விவேக் என்ற ஊழியர் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வது, பணத்தை எடுத்து வருவது போன்ற பணிகளை விவேக் செய்து வந்துள்ளார்.

இந்த நிறுவனம் பேங்க் ஆப் பரோடாவில் டெபாசிட் செய்ய 1.37 கோடி ரூபாயை விவேக்கிடம் வழங்கியது. அவருடன் நான்கு பாதுகாப்பு பணியாளர்களும் சென்றனர். ஆனால், பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல் விவேக் தலைமறைவானார். வங்கிக்குச் சென்ற விவேக் திரும்பி வராததால், அவர் பணியாற்றிய நிறுவனத்தின் மேலாளர் சிசுபால், வங்கியைத் தொடர்பு கொண்டார்.

அப்போது வங்கியில் ரூ.1-37 கோடி ரூபாயை விவேக் டெபாசிட் செய்யவில்லை என்ற உண்மை தெரிய வந்தது. இதையடுத்து விவேக் செல்போன் எண்ணுக்கு சிசுபால் போன் செய்துள்ளார். ஆனால், அந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தெரிவித்தது. இதுகுறித்து ராகப்கஞ்ச் போலீஸில் பிரிக்ஸ் நிறுவனம் புகார் செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை டிசிபி விகாஸ் குமார் கூறுகையில்," விவேக்கை கண்டுபிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வங்கியைத் தவிர மற்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் விவேக் கைது செய்யப்படுவார்” என்றார். வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டிய பணத்தோடு ஊழியர் தலைமறைவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in