தினமும் காப்பர் கம்பிகள் திருட்டு; காரில் எடுத்துச்சென்ற ஊழியர்கள் சிக்கினர்: கூடங்குளம் அணு உலையில் அதிர்ச்சி

தினமும் காப்பர் கம்பிகள் திருட்டு; காரில் எடுத்துச்சென்ற ஊழியர்கள் சிக்கினர்: கூடங்குளம் அணு உலையில் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணு உலையில் காப்பர் கம்பிகள் திருடு போன சம்பவத்தில் ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இப்போது முதல் இரு அணு உலைகள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது அணு உலை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 7-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த உலையில் பணிகள் நடந்து வருகிறது.

இதேபோல் அணு உலை வளாகத்தில் வேறுசில கட்டுமானப் பணிகளும், அணு உலை பராமரிப்புப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக கட்டுமானப் பகுதி குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தன. அண்மையில் இந்த காப்பர் கம்பிகளை பணியாளர்கள் எடுக்கச் சென்றனர். அப்போது அங்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரி ரஞ்சித் கூடங்குளம் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கூடங்குளம் அணு உலை அதிகபட்ச பாதுகாப்புக் கொண்ட பகுதியாகும். அதற்குள் புகுந்து காப்பர் கம்பிகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்து இருந்தது. இந்தநிலையில் இவ்விவகாரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிசெய்யும் ஒப்பந்த ஊழியர்களே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நேற்று மாலை அணுமின் நிலையத்தில் பணிசெய்யும் தற்காலிக ஊழியர்கள் பணி முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு ஊழியரின் காரில் பின்பக்கம் காப்பர் கம்பிகள் இருப்பது தெரிந்தது. இதனால் சந்தேகப்பட்டு அந்தக் காரை அணுமின் நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது அதில் அணுமின் நிலையப் பணிக்காக வாங்கி வைத்திருந்த காப்பர் கம்பிகள் இருந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஊரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(24) என்பதும், அணுமின் நிலையத்தில் தற்காலிக பணியாளராக இருக்கும் அவர் தினமும் மாலையில் வீட்டுக்குச் செல்லும்போது காப்பர் கம்பிகளைத் திருடி காரில் வைத்துக் கொண்டுசெல்வதும் தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த ஒப்பந்த பணியாளர்கள் அருண்(21), அஜய்(22) சந்தோஷ்(22), சிவா(23), இசக்கியப்பன்(22) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in