பாம்பன் பாலத்தில் ரெட் அலர்ட் அபாய ஒலியால் பரபரப்பு: ரயில் சேவை முற்றிலும் நிறுத்தம்

பாம்பன் பாலத்தில் ரெட் அலர்ட் அபாய ஒலியால் பரபரப்பு: ரயில் சேவை முற்றிலும் நிறுத்தம்

பாம்பன் மைய (தூக்குப் பாலம்) பகுதியில் அதிர்வுகளைக் கண்டறியும் கருவியில் அபாய ஒலி ஒலித்ததால் ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரயில்களின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்றுடன் மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, தமிழக கடற்பகுதிகளில் படகுகள் கடலுக்குச் செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. காற்றின் எதிரொலியாக பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை முதலாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றமாக பாம்பன் பாலத்தில் ரயில்கள் மித வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளை கண்டறிய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பொருத்திய சென்சார் கருவி இன்று அதிகாலை ரெட் அலர்ட்டுட்ன் அபாய ஒலி எழுப்பியது. இதனையடுத்து, பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் மதுரை பாசஞ்சர், நண்பகல் புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி-ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில், சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை ராமேஸ்வரம் சேது அதிவிரைவு ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையையடுத்து, பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள், சென்சார் கருவி பொருத்திய சென்னை ஐஐடி நிறுவன பணியாளர்கள் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆய்வு செய்து சரி செய்த பின் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல அனுமதிக்கப்படும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in