பலான தளத்துக்கு புகழ் சேர்க்கும் எலான் மஸ்க்.. வைரலாகும் மீம்ஸ்கள்!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ட்விட்டரின் சகல அடையாளங்களையும் மாற்றும் எலான் மஸ்க்கின் முடிவு, பிரபல பலான வீடியோ தளத்துக்கே புகழ் சேர்ப்பதாக அமையும் என நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை மீம்ஸ்களாக பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே தடாலடி சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார் எலான் மஸ்க். அவற்றின் ஒரு பகுதியாக தற்போது ட்விட்டரின் தவிர்க்க முடியாத அடையாளமாக இருந்த நீலநிற பறவையை மாற்றி ’எக்ஸ்’ என்பதன் ஆங்கில எழுத்தை வைத்திருக்கிறார். மேலும் ட்விட்டர் தளத்தின் முகவரியையும் ’எக்ஸ் டாட் காம்’ என்பதாக மாற்றியுள்ளார். ’எக்ஸ் கார்ப்பரேஷன்’ எனும் தாய் நிறுவனத்தின் அடையாளத்துக்காக இந்த புதிய மாற்றங்களை அவர் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

ட்விட்டரின் அடையாளங்களை இப்படி எலான் மஸ்க் மாற்றுவதற்கு, ட்விட்டர் பயனர்கள் பல்வேறு வகைகளிலும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக ட்விட்டர் தளத்தில் வைத்தே எலான் மஸ்கையும், ட்விட்டரின் புதிய அடையாளங்களையும் கலாய்த்து தள்ளுகின்றனர். அவற்றில் முக்கியமான ’எக்ஸ் வீடியோஸ்’ என்பது தற்போது ட்ரெண்டிங்கில் நீடித்து வருகிறது.

வயது வந்தவர்களுக்கான பாலியல் சார்ந்த படைப்புகளை, ’எக்ஸ்’ என்ற சங்கேத மொழியில் குறிப்பிடுவது இணையத்தில் வழக்கம். எனவே, பாலியலை படையல் வைக்கும் தளங்கள் பெரும்பாலும் தங்களது முகவரியில் எக்ஸ் என்பதை வைத்திருக்கும். இணையத்தின் தேடலிலும் எக்ஸ் என்றாலே ஏடாகூடம் என்பதே பொருளாகும் அளவுக்கு இதன் பின்னணி விரிகிறது.

ட்விட்டர் தளத்தின் புதிய தளர்வுகளின் அடிப்படையில் அதில் மணிக்கணக்கில் நீளும் வீடியோக்களையும் வலையேற்றலாம். இதற்கு அப்பால், பாலியல் வீடியோ துணுக்குகளின் பெருங்கடலாகவும் ட்விட்டர் தளம் விளங்கி வருகிறது. இவற்றின் மத்தியில் ட்விட்டரின் பெயர் எக்ஸ் என மாறுவது அதன் பயனர்களால் அதிகம் அர்ச்சிக்கப்பட்டு வருகிறது. ’ட்விட்டருக்கும் - எக்ஸ் வீடியோஸ் தளத்துக்கு இடையிலான வித்தியாசங்களை குறைக்கவே எலான் மஸ்க் முயன்று வருகிறார்’ என்பதில் ஆரம்பித்து பலவகையிலும் எலான் மஸ்கை நெட்டிசன்கள் சதாய்த்து வருகின்றனர்.

மேலும், ’இனி ட்விட்டருக்கான வீடியோக்களை தேடினால் எக்ஸ் வீடியோ மட்டுமே வந்து விழும்’, ’ட்விட்டர் தளம் ஏற்கனவே அப்படித் தான் புரையோடிப் போயிருக்கிறது’, ’காசு பார்க்கும் நோக்கில் ’எக்ஸ் வீடியோஸ்’ பலான தளத்துக்கு மாற்றாக ட்விட்டரை மாற்ற முயல்கிறார் எலான் மஸ்க்...’ என்றெல்லாம் வகைதொகையாக கலாய்த்து வசை பாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இவற்றுக்கு சிகரம் வைத்தார் போன்று ’எக்ஸ் வீடியோஸ்’ தளம் சார்பில், தங்கள் புகழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதற்காக எலான் மஸ்க்குக்கு பிரத்யேகமாய் நன்றியும் தெரிவித்திருக்கிறார்கள். எதனையும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்வதையும், சுய பகடியையும் வழக்கமாக வைத்திருக்கும் எலான் மஸ்க், இந்த எக்ஸ் வீடியோஸ் விவகாரத்தில் இன்னும் வாய் திறக்காதிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in