மத்திய பட்ஜெட்: செப்டிக் டேங்க் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

கழிவுநீர் தூய்மை செய்யும் மனிதர்கள்
கழிவுநீர் தூய்மை செய்யும் மனிதர்கள்The Hindu

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கால்வாய்கள் தூய்மை செய்வதில் முற்றிலும் இயந்திர மயம் அமல்படுத்தப்படும்லாகும் என உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நாட்டில் அதிகரித்து வரும் செப்டிக் டேங்க் சாவுகளுக்கு முடிவு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிவு நிலை தொடர்கிறது. சக மனிதரை இழிவாக நடத்தும் இந்தப் போக்கினை ஒழிக்கும் அரசின் முயற்சிகளும் முழுமையாக நடைமுறைக்கு வந்தபாடில்லை. கழிவுநீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகள் அகற்றும் பணி முற்றிலும் இயந்திரமயக்காப்படும் என்ற அரசுகளின் அறிவிப்புகளும் அந்தளவிலேயே நின்று விடுகின்றன. இதனால், கழிவு சார்ந்த அவலத்துக்கு அப்பால் கணிசமான மனித உயிர்கள் பலியாவதும் நடந்து வருகிறது.

செப்டிக் டேங்க் தூய்மை செய்வதில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என சட்டம் சொல்கிறது. ஆனபோதும், எளிய மக்களை அந்த தொழிலில் ஈடுபடுத்துவதை சற்றும் பொறுப்பின்றி பொதுசமூகம் தொடர்ந்து வருகிறது. சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் மற்றும் பஞ்சம் பிழைக்க வந்த வட இந்திய தொழிலாளர்களை வைத்து, கழிவுநீர் தொட்டிகளை தூய்மை செய்யும் பணியில் பல்வேறு ஏஜென்சிகள் முறைகேடாக ஈடுபடுகின்றன.

இதில் உரிய ஊதியத்தை வழங்காது உழைப்பு சுரண்டலிலும் இந்த ஏஜென்சிகள் ஈடுபடுகின்றன. கழிவு தொட்டிகளில் தேங்கிக்கிடக்கும் நச்சு வாயுக்கள் உயிர்களை பலி வாங்கவும் செய்கின்றன. பெருநகரங்களின் உள்ளாட்சி நிர்வாகங்கள் பெயரளவில் கழிவகற்றும் இயந்திரங்களை வாங்கி வைத்திருப்பினும், அவற்றை முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்துவதில்லை. மேலும் தேவைக்கேற்ப இயந்திர பயன்பாடுகளும் நடப்பில் இல்லை.

தற்போதைய பட்ஜெட் அறிவிப்பில் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் 100% இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. இது மெய்யாலுமே நடைமுறைக்கு வருமெனில், மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, கழிவுநீர் நச்சு வாயுக்கு பலியாகும் மனித உயிர்களையும் தடுக்க ஏதுவாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in