ரயில் மோதி பெண் யானை பலி; காயத்துடன் தப்பிய குட்டி யானை: கோவையில் நடந்த துயரம்

ரயில் மோதி பெண் யானை பலி; காயத்துடன் தப்பிய குட்டி யானை: கோவையில் நடந்த துயரம்

கோவையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. குட்டி யானை காயத்துடன் உயிர் தப்பியது.

கோவையில் உள்ள கேரள எல்லையில் தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு கோவை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அப்போது வனப்பகுதியில் தண்டவாளம் இருக்கும் பகுதிகளில் கம்பி வேலியை அமைக்க தமிழ்நாடு, கேரள அரசுகள் முடிவு செய்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கோவையில் கேரள எல்லை அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கரை- வாளையார் இடையே கொட்டாம்பட்டி பகுதியில் 17 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளன. அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் யானை சிக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், யானை கூட்டத்துடன் வந்த குட்டி யானை ஒன்று காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அந்த குட்டி யானை தற்போது காயத்துடன் வனப்பகுதியில் சென்று விட்டதாகவும் தெரிகிறது. காயமடைந்த குட்டி யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

ரயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் யானைகளை காக்க இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in