
பெண் யானையின் மண்டையோடு கோரைப்பற்கள் மற்றும் எலும்புகளுடன் ஆற்றங்கரையோர மணல் பகுதியில் கண்டறியப்பட்டது.
கோவை போலாம்பட்டி வனச்சரகம் வெள்ளப்பதி பிரிவு, முள்ளாங்காடு சுற்று, பெரியாறு சராகம் பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து பணி மேற்கொண்டிருந்தபோது இறந்த பெண் யானையின் மண்டையோடு, கோரைப்பற்கள் மற்றும் எலும்புகளுடன் ஆற்றங்கரையோர மணல் பகுதியில் கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து இன்று கோவை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் அவர்கள், போலாம்பட்டி வனச்சரக அலுவலர் மற்றும் வனப்பணியாளர்கள் உடன் இருக்க, கோவை வன மண்டலம், ஆனைமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தார்.
இறந்தது பெண் காட்டு யானை எனவும், வயது 23 முதல் 25 எனவும் இறந்து சுமார் 75-90 நாட்கள் இருக்கலாம் எனவும் வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆய்வக சோதனைக்காக யானையின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.