பிரியாமல் சுற்றிசுற்றி வந்த யானைக் கூட்டம்; முதலுதவி அளித்த வனத்துறையினர்: பெண் யானை உயிரிழந்த சோகம்

பிரியாமல் சுற்றிசுற்றி வந்த யானைக் கூட்டம்; முதலுதவி அளித்த வனத்துறையினர்: பெண் யானை உயிரிழந்த சோகம்

தென்காசி மாவட்டத்தில் வனத்திற்குள் உடல்நலமின்மையால் உயிர் இழந்த யானைக்கு பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் முடிவுகளுக்குப் பின்பே யானை உயிரிழப்பின் காரணம் தெரியவரும் என வனத்துறை மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வன ஊழியர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று மிகவும் சோர்வான நிலையில் கிடந்தது. இதுகுறித்து தென்காசி மாவட்ட வன அலுவலர் முருகனுக்குத் தகவல் கொடுத்தனர். நேற்று இவர் தலைமையில் குழுவினர் காட்டுக்குள் சென்றபோது, உடல்நலமின்மையால் படுத்திருந்த யானையைச் சுற்றி அதிகளவில் யானைகள் நின்று கொண்டிருந்தன. இதனால் யானைக்கு முதலுதவி சிகிச்சையும், தொடர்ந்து சில ஊட்டச்சத்து உணவுகளும் கொடுத்துவிட்டு வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் வனத்துறையினர் யானை உடல் சோர்வாக இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது அந்த யானையைச் சுற்றி ஏராளமான யானைகள் இருந்தன. அதனால் வெடி வெடிக்கப்பட்டு அவை கலைக்கப்பட்டன. தொடர்ந்து வனத்துறை மருத்துவர்கள் சகிதம் வன ஊழியர்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்த பெண் யானை உயிர் இழந்திருந்தது. இதுதொடர்பாக வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, “அந்த யானைக்கு 40 வயது இருக்கும். அதன் உடலில் எந்த காயங்களும் இல்லை. கடைசி நேரத்தில் கர்ப்பம் தரித்து யானை இறந்ததா? அல்லது வாயில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு சாப்பிட முடியாமல் யானை இறந்ததா? என்பது குறித்தும் பிரேதப் பரிசோதனை முடிவுக்கு பின்புதான் தெரியவரும்” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in