தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
தமிழக வனக்கோட்டங்களில், ஆண்டுக்கு ஒரு முறையும், முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில், ஒவ்வொறு ஆண்டும் பருவமழைக்கும் முந்தைய மற்றும் பிந்தைய காலங்களில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று தற்போது ஆண்டுக்கு ஒருமுறை, தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுக்கும் நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று (மே 23) தொடங்கி 25-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. நேர்கோடு முறையில், நீர்நிலைகள் கண்காணிப்பு மற்றும் கால் தடம், எச்சம் ஆகிய முறைகளில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதற்காக திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகத்தியமலை யானைகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடர்பான பயிற்சி நேற்று அளிக்கப்பட்டுள்ளது. அகத்தியமலை யானைகள் காப்பகத்தில் 37 குழுவினர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 120- க்கும் மேற்பட்ட யானைகளும், களக்காடு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட யானைகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.