
தாம்பரம் அருகே தனியார் விடுதியில் செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது மூன்று பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் பயன்படுத்தும் செல்போன்கள் மூலம் பல ஆபத்துகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றும்போது அது வெடித்து சிதறி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. செல்போனை பேசும்போதும் சார்ஜர் போடும்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி வரும் நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. சிலர் சார்ஜர் போட்டுக்கொண்டு செல்போன் பேசிக்கொண்டு வருகின்றனர். இதனால் பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடக்கிறது.
இந்த நிலையில், செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது மூன்று பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இன்று ஜன்னல் கதவுகளை கழற்றும் பணி நடந்துள்ளது. அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இந்த விடுதியின் கட்டிடத்தின் அருகில் உயர் அழுத்த மின்கம்பி இருக்கிறது. மாணவி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உடல் கருதி தூக்கிவீசப்பட்டுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் அருகில் இருந்த மேலும் 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றப் பெண்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இந்த விடுதி அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த மூன்று பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.