
அனைத்து மின் நுகர்வோர்களிடம் இருந்தும், டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 3.40 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இதில், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட இலவச திட்ட பயனாளிகள் போக, இரு மாதங்களுக்கு ஒரு முறை 2 கோடி பேர் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதில் 95 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது மின் கட்டணத்தை பொதுமக்கள் வசூல் மையங்கள், இ சேவை மையங்களில் ரொக்க பணம், காசோலை, வரைவோலையில் செலுத்தி வருகின்றனர். மேலும் மின்வாரிய அலுவலக நேரத்தில் மட்டுமே பணத்தை செலுத்தி ருகின்றனர். இதுதவிர மின் வாரிய இணையதளம், செல்போன் செயலி போன்ற டிஜிட்டல் முறையிலும் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மின்கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர்களிடமிருந்து டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் எப்படி மின் கட்டணம் செலுத்துவது என்பது குறித்து மின்வாரிய அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில் விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.