விளையாடியபோது உடைந்து விழுந்த மின்கம்பம்; பலத்த காயத்துடன் சிறுமி அட்மிட்: மின் தடையால் விபரீதம் தவிர்ப்பு!

விளையாடியபோது உடைந்து விழுந்த மின்கம்பம்; பலத்த காயத்துடன் சிறுமி அட்மிட்: மின் தடையால் விபரீதம் தவிர்ப்பு!

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது கம்பம் ஒடிந்து விழுந்ததில், பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது அவுரிமேடு. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு கிருத்திகா(11) என்ற மகள் இருக்கிறார். கிருத்திகா மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை அவர் தனது வீட்டிற்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் அருகே இருந்த மின்கம்பம் ஒடிந்து கிருத்திகா மீது விழுந்தது. இதில் அந்த சிறுமி மின்கம்பத்துக்கு அடியில் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவத்தில் சிறுமியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.

பின்பு மேல் சிகிச்சைக்காக அந்த சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்த முறையில் செய்யப்படும் மின் கம்பங்கள் தரமற்றதாக இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தரமற்ற மின்கம்பத்தை அமைப்பதற்கு உடந்தையாக இருந்த ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in