குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதமா?

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குத் தேர்தல் ஆணையம் தரும் விளக்கம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்கோப்புப் படம்

பிரதமர் மோடியின் பிரச்சாரம் முடியும்வரை காத்திருந்து குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. இதற்கு விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் ஆணையம், தாங்கள் 100 சதவீதம் நடுநிலையைக் கடைப்பிடிப்பதாகக் கூறியிருக்கிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று வெளியிட்டார்.

இதற்கிடையே, அக்டோபர் 14-ம் தேதி இமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நவம்பர் 12-ம் தேதி அம்மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்தச் சூழலில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படும் எனத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

இமாசல பிரதேசத்தின் தேர்தல் தேதி கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் தேர்தல் தேதி மட்டும் குறுகிய கால இடைவெளியில், தாமதமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தியடைந்திருக்கின்றன. இரண்டு வார இடைவெளியில் நடைபெறும் இரண்டு மாநிலத் தேர்தல்களுக்கும் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறித்தும் அக்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதற்கு முன்புவரை அங்கு பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடிக்கு வாய்ப்பளித்துவிட்டு, அதன் பின்னர் அம்மாநிலத் தேர்தல் தேதியை அறிவித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றன.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “தேர்தல் ஆணையம் நடுநிலையானது எனும் பெருமிதத்துக்குரிய மரபைக் கொண்டது. தேர்தல் ஆணையம் 100 சதவீதம் நடுநிலைமையானது. சிலர் எதிர்மறையான சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர். வார்த்தைகளைவிடவும் செயல்பாடுகளும், அவற்றின் வெளிப்பாடுகளும் வலுவானவை. சில சமயங்களில் தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் கட்சிகள், முடிவுகள் வெளியானதும் ஆச்சரியமடைந்தது உண்டு” என்று கூறினார்.

இமாசல பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் ஜனவரி 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 18-ல்தான் முடிவடைகிறது. இரண்டு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in