பணத்திற்காக மூதாட்டி கொலை: கட்டையால் தம்பி தாக்க, கழுத்தை நெரித்துக் கொன்ற அக்கா

கொலை செய்யப்பட்ட சாந்தகுமாரி.
கொலை செய்யப்பட்ட சாந்தகுமாரி.பணத்திற்காக மூதாட்டி கொலை: கட்டையால் தம்பி தாக்க, கழுத்தை நெரித்துக் கொன்ற அக்கா

சென்னையில் பணம் தரமறுத்த மூதாட்டியை கொலை செய்த அக்கா, தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணி, மகாத்மா காந்தி நகர் ,கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி(65). இவருக்கு இரண்டு மகள்களும், ஓரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சாந்தகுமாரி தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டினுள் சென்று சாந்தகுமாரி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் அவரது பேரன், பாட்டி சாந்தகுமாரியை பார்க்க வந்துள்ளார்.

நீண்ட நேரம் கூப்பிட்டும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து கதவைத் திறந்து பார்த்த போது, சாந்தகுமாரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சிறுவன், உடனே தனது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் உடனே தரமணி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் சாந்தகுமாரி உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சாந்தகுமாரி வீட்டை லீசுக்கு விடுவதற்காக ஒருவரிடம் 3.50 லட்சம் ரூபாய் வாங்கி பீரோவில் வைத்திருந்ததை அறிந்து கொண்ட யாரோ ஒருவர் அவரை கொலை செய்துவிட்டு பீரோவில் பணம், நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், சாந்தகுமாரி வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்த விஜயபாஸ்கரன் என்பவரது மகள் பூஜா(21) என்ற பெண்ணிடம் இறந்து போன சாந்தகுமாரியின் மருமகன் இரு நாட்களுக்கு முன்பு தவறான நோக்த்துடன் பேசியுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருக்க சாந்தகுமாரியிடம் பூஜா பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் சாந்தகுமாரி பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் நேற்று காலை 7.30 மணிக்கு இவரது வீட்டிற்கு வந்த பூஜா மற்றும் அவரது 18 வயது தம்பி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் தகராறு ஏற்பட்டது..இதில் ஆத்திரமடைந்த சிறுவன் கையில் வைத்திருந்த கட்டையால் சாந்தகுமாரியின் தலையில் அடித்துள்ளார். அப்போது சாந்தகுமாரி சிறுவனது கைவிரலை கடித்துள்ளார். உடனே அருகில் இருந்த பூஜா துப்பட்டாவால் சாந்தகுமாரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அத்துடன் அவரது சுருக்குப்பையில் இருந்த பீரோ சாவியை எடுத்து அதில் இருந்த 3.50 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் பூஜா, அவரது தம்பியை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சாந்தகுமாரியின் மருமகன் தவறான கண்ணோட்டத்தில் பேசியதை வைத்து மூதாட்டியிடம் மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதும், வீட்டை லீசுக்கு விடுவதற்காக 3.50 லட்சம் வாங்கி வைத்திருந்ததை அறிந்து அவரிடம் கேட்டு மிரட்டியதும், அவர் பணம் தரமறுத்ததால் கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பூஜாவையும், அவரது தம்பியையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in