தனியார் சொகுசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து! 8 பேர் படுகாயம்!

தனியார் சொகுசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து! 8 பேர் படுகாயம்!

சென்னையில் இருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து  மின் கம்பத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதி கவிழ்ந்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம், வானூர் சிறுவை பகுதியை சேர்ந்த தங்கமணி ( 45) என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றார். 


இந்த பேருந்து இன்று அதிகாலை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது  திடீரென ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோரத்தில் இருந்த பாலக்கட்டையில் மோதியதில் நிலைகுலைந்த பேருந்து அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. பயங்கர வேகத்தில் மின் கம்பத்தில் மோதியதில், பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. 

இதைக் கண்டதும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் தேனியை சேர்ந்த புவனேஷ்வரி (25), செல்வராஜ்(55), வேல்முருகன் (55), சுருளிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(63), வேல்மணி(47), காளியம்மாள் (77 ) உள்ளிட்ட 8 பேருக்கு  காயம் ஏற்பட்டது.  காயமடைந்தவர்கள்  சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in