திடீரென வயல்களில் புகுந்து தாக்கிய கரடி: 8 விவசாயிகள் படுகாயம்

திடீரென வயல்களில் புகுந்து தாக்கிய கரடி: 8 விவசாயிகள் படுகாயம்

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் முந்திரி மற்றும் தென்னந்தோப்புகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கரடி தாக்கியதில் 8 விவசாயிகள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் வஜ்ரபுகொட்டுரு நகருக்கு அருகில் நடந்தது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடிசிங்கி மற்றும் வஜ்ரபுகொட்டுருக்கு இடையில் முந்திரி மற்றும் தென்னந்தோப்புகளில் புகுந்த கரடி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளையை தாக்கியது. மேலும், இந்தக் கரடி தாக்கியதில் 10 கால்நடைகளும் காயமடைந்தன.

கரடி தாக்கி காயமடைந்தவர்களில் 6 பேர் உயர் சிகிச்சைக்காக ஸ்ரீகாகுளத்தில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். திடீரென வயல்வெளிகளில் புகுந்து கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார் மற்றும் வனத்துறையினர் கிராமத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மீண்டும் கரடி தாக்குமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதால், வனத்துறையினர் உடனடியாக கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சீதிரி அப்பலர்ஜூ காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய உத்தரவிட்டார். மேலும், கரடியை பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் காக்கிநாடா மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்த புலியை பிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. அந்த ஆண் புலி மே 23 முதல் வனப்பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களில் சுற்றித் திரிகிறது. இது பல எருமைகள் உட்பட சில கால்நடைகளைக் கொன்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in