இஷ்டத்திற்கு முட்டை விலையை குறைத்து நிர்ணயம்: என்இசிசிக்கு எதிராக இரவில் கோழிப் பண்ணையாளர்கள் தர்ணா

கோழிப்  பண்ணையாளர்கள் தர்ணா
கோழிப் பண்ணையாளர்கள் தர்ணா இஷ்டத்திற்கு முட்டை விலையை குறைத்து நிர்ணயம்: என்இசிசிக்கு எதிராக இரவில் கோழிப் பண்ணையாளர்கள் தர்ணா

முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி நடைபெறுவதாக கூறி, நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மண்டல அலுவலகத்தில் கோழிப்  பண்ணையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் 1,100 க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் சுமார் 6 கோடி  கோழிகள் வளர்க்கப்படுகிறது. இவற்றின் மூலம் தினசரி சுமார் 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தியாகின்றன. 'என் முட்டை என் விலை' என்ற கொள்கை அடிப்படையில், கோழிப் பண்ணையாளர்களின் நலனுக்காக, அகில இந்திய அளவில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) மண்டல வாரியாக செயல்பட்டு வருகிறது. 

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் வாரந்தோறும் திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் முட்டையின் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுகிறது. என்இசிசி அறிவிக்கும் முட்டை விலைக்கு, முட்டை வியாபாரிகள் கோழிப்பண்ணைகளில் கொள்முதல் செய்யாமல், என்இசிசி அறிவித்த விலையை விட 50 பைசாவுக்கும் மேல் குறைத்து கொள்முதல் செய்கின்றனர். 

அதே நேரத்தில் முட்டை விற்பனை கடைகளில் என்இசிசி விலைக்கும் கூடுதலாக 50 பைசா உயர்த்தி விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளுக்கான முட்டை மைனஸ் விலையை நிர்ணயிப்பதற்கு நெஸ்பேக் என்ற கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் நெஸ்பேக் அறிவிக்கும் விலையைவிட குறைந்த விலைக்கு முட்டைகளை கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதாக கோழிப் பண்ணையாளர்கள்  குற்றம்சாட்டி வருகின்றனர். இது சம்மந்தமாக மண்டல என்.இ.சி.சி தலைவர் மற்றும் விலை நிர்ணய குழு உறுப்பினர்களை சந்தித்து முறையிட, நேற்று 50க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளர்கள், நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு வந்தனர். 

என்இசிசி மண்டல தலைவர் டாக்டர். செல்வராஜ் மற்றும் விலை நிர்ணயக் குழு உறுப்பினர்கள் யாரும் நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை. மேலாளர் மற்றும் அவரது உதவியாளர் மட்டுமே வந்திருந்தனர். நீண்ட நேரம் பண்ணையாளர்கள்  காத்திருந்தும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வராததால்  பண்ணையாளர்கள்,  என்இசிசி அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, முட்டை விலையை தங்கள் இஷ்டத்திற்கு விலையை குறைத்து நிர்ணயம் செய்து வருவதாகவும்,  கோழிப் பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராக என்இசிசி செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி இன்று இரண்டாவது நாளாகவும் தங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை அவர்கள் தொடர்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in