
அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலாவிற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக நடந்து வரும் இந்த விசாரணையினை தொடர்ந்து கரூரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் புறவழிச் சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களா மற்றும் செந்தில் பாலாஜியின் ஆடிட்டர் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கரூர் புறவழிச் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பங்களா குறித்த ஆவணங்களுடன் ஆஜராகும்படி அசோக்குமாரின் மனைவி நிர்மலாவிற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக புதிதாக கட்டப்பட்டு வரும் பங்களாவிலும் நிர்மலாவின் பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறையினர் சம்மன் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.