
ராணுவ நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் 2 மாநிலங்களை சேர்ந்த பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை இன்று(நவ.4) புதிய ஆய்வினை தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தோருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலங்களை ஆக்கிரமித்து அபகரித்தது தொடர்பான பண மோசடி விவகாரத்தை கையிலெடுத்த அமலாக்கத்துறை இன்று காலை அதிரடி ஆய்வினை தொடங்கியது.
2 மாநிலங்களின் 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையின் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன. கொல்கத்தா பின்னணியில் இயங்கும் அமித் அகர்வால் உள்ளிட்ட சிலருக்கு சொந்தமான வணிக நிறுவனங்களில் இந்த ஆய்வுகள் மையம் கொண்டுள்ளன.
இதற்கிடையே ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த சோரன் மீதான அமலாக்கத்துறையின் அழுத்தமும் அதிகரித்துள்ளது. நேற்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் விடுத்திருந்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்த ஹேமந்த் சோரன், பாஜகவை தாக்கி ட்விட்டரில் தனது ஆட்சேபத்தை பதிவு செய்தார். ஜார்கண்ட் மாநிலத்தின் சுரங்க ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நெருக்கி வருகிறது. இது தொடர்பான முந்தைய ஆய்வுகளில் சோரனின் உதவியாளர்களை கைது செய்ததுடன் ஏராளமான ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.