
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜராக உள்ள நிலையில், அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலத்தில் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஏற்கனவே அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 8 மாதங்களுக்கும் மேலாக அவருக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சூழலில் புதிய பரபரப்பாக டெல்லி மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் ராஜ்குமாருக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. பணமோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில், அது மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தானா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனிடையே இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ள முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, “முதலமைச்சர் கைது செய்யப்பட்டாலும், சிறையில் இருந்து ஆட்சி தொடரும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.