இப்ராஹிம் தாவூத் சகோதரியிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி!

மும்பை நிழலுலகில் புதிய நகர்வு?
இப்ராஹிம் தாவூத் சகோதரியிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி!
ஹஸீனா பார்கர்

இப்ராஹிம் தாவூத்தின் சகோதரியான ஹசீனா பார்கரின் வசிப்பிடத்திலும் அவர் தொடர்பான பல்வேறு இடங்களிலும் அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பு மற்றும் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, 1993ல் கோரமான குண்டுவெடிப்புகளுக்கு மும்பை மாநகரை ஆளாக்கியவர் தாவூத் இப்ராஹிம். தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத்துக்கு, உறவினர்கள் மற்றும் சொத்துக்கள் மும்பையில் உண்டு. தாவூத் உடனான அவரது உறவினர்களின் தொடர்புகள் மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் மற்றும் விசாரணைகள் அவ்வப்போது எழுந்து அடங்குவது உண்டு.

அந்த வகையில், மும்பை நிழலுலகத்தில் அண்மையில் நடைபெற்ற பெரும் சொத்துப் பரிமாற்றம் மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பான புகார், தேசிய பாதுகாப்பு முகமையான, என்ஐஏ வசம் சென்றது. இதுதொடர்பாக விசாரித்த என்ஐஏ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறை சார்பிலான ரெய்டுகள் மும்பையில் நிலைகொண்டுள்ளன.

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

தாவூத் இப்ராஹிமின் சகோதரியான, மும்பையில் வசிக்கும் ஹசீனா பார்கர் என்பவர் இந்த சோதனையின் மையமாகி உள்ளார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த இடங்களில், மும்பயின் முக்கிய அரசியல்வாதி ஒருவரும் அடங்குவார் எனவும் தெரிய வருகிறது.

கணக்கில் வராத பெரும் தொகையின் கீழான சொத்துப் பரிமாற்றம், அதற்கான சட்டவிரோத முறைகளின் கீழான பணப்பரிவர்த்தனை ஆகியவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் நிழலுலக செயல்பாடுகளுக்கும் இந்த பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை தொடர்கிறது.

என்ஐஏ வழக்குப் பதிவு செய்ததை அடுத்தே அமலாக்கத்துறை களமிறங்கி இருப்பதால், தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தகவல்கள் தொடர்பாகவும் மும்பை வட்டாரம் பரபரத்து வருகிறது. அமலாக்கத்துறையின் சோதனை குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related Stories

No stories found.