ஆன்லைன் ரம்மி: வலைவிரிக்கும் அமலாக்கத் துறை

ஜிஎஸ்டி அதிகரிக்கவும் பரிசீலனை
ஆன்லைன் ரம்மி: வலைவிரிக்கும் அமலாக்கத் துறை

ஆன்லைன் சூதாட்ட வலைதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக, பெருமளவு ஹவலா பரிமாற்றம் உள்ளிட்ட பணமோசடிகள் நடைபெறுவதாக அவற்றை அமலாக்கத் துறை இறுக்கி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்வது முதல் ஒழுங்குபடுத்துவது வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பணம் படைத்தோர் முதல் சாமானியர் வரை ஆன்லைன் சூதாட்டங்களில் ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணத்தை பறிகொடுத்ததில் தனிநபர் தற்கொலை முதல் குடும்பமே பலியாவது வரையிலான துயரங்களும் அரங்கேறி வருகின்றன.

வலைதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாகவே பொதுமக்களின் சேமிப்பை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சூறையாடி வருகின்றன. அரசு நடவடிக்கை பாயும்போதெல்லாம், நீதிமன்றங்கள் வாயிலாக தடை வாங்குவதும், அதிகார லாபிகளை பிரயேகிப்பதுமாக அந்த நிறுவனங்கள் தனி விளையாட்டு காட்டுகின்றன. இவற்றை ஒட்டுமொத்தமாக தடைசெய்யும் நடவடிக்கைகள் தாமதமாகி வருவதால், அவற்றை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.

ஆன்லைன் சூதாட்டத்தில் புழங்கும் பணத்துக்கு ஜிஎஸ்டி அதிகம் விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கான கட்டணம் மற்றும் பரிசுத் தொகை ஆகியவை இந்த வகையில் ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும். சுமார் 28% ஜிஎஸ்டி விதிப்பதன் மூலம் ஆன்லைன் சூதாட்டங்கள் மீதான பொதுமக்களின் மோகத்தை தணிக்க இயலும்.

இவற்றுக்கு அப்பால் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறையும் களமிறங்கி உள்ளது. இந்த நிறுவனங்களின் போர்வையில் ஹவாலா பரிமாற்றம் உள்ளிட்ட நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக அமலாக்கத்துறையின் புலனாய்வு கண்டறிந்தது. அந்த அடிப்படையில், முறைகேடுகளில் ஈடுபட்ட ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் செயலி நிறுவனங்களிடம் இருந்து ரூ.213 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டங்களை இணையத்தில் கடை விரித்திருக்கும் பல்வேறு நிறுவனங்களின் பின்னணி சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதால், சூதாட்ட நிறுவனங்களில் சேரும் பெருந்தொகை போலி நிறுவனங்கள் வாயிலாக அயல்நாடுகளை அடைவது குறித்தும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிகள் முழுவீச்சில் நடைபெறும்போது ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து சாமானியர்கள் விடுபடுவது சாத்தியமாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in