'பொருளாதார தேக்கநிலை, விலைவாசி இரண்டும் அதிகரிக்கும்’ : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

'பொருளாதார தேக்கநிலை, விலைவாசி இரண்டும் அதிகரிக்கும்’ : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

பொருள்களுக்குத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, அவசியப் பண்டங்களைத் தவிர மற்றவற்றை நுகர்வதில் மக்களுக்குள்ள எச்சரிக்கை உணர்வு ஆகியவற்றால் அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் பொருளாதார தேக்கநிலை – விலைவாசி உயர்வும் இரண்டும் உயர்ந்துவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுவரும் விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகள், சீனாவின் பெருந்தொற்று புதிய வடிவம் பெற்றதால் அந்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அமல்படுத்தப்படும் பொது முடக்கம் ஆகியவற்றால் விநியோகச் சங்கிலிகள் அறுபட்டது மீண்டும் முழுதாக இணைக்கப்பெறவில்லை.
விலைவாசி உயரும்
உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துவரும் ராணுவ நடவடிக்கையும் அதைத் தடுக்க மேற்கத்திய நாடுகள் அறிவித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகளும் நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. எண்ணெய் வள நாடுகள் தங்களுடைய உற்பத்தியை பெருந்தொற்றுக்கு முந்தைய அளவுக்கு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்தும், விலையை மட்டும் உயர்த்தியும் எடுத்துவரும் நடவடிக்கைகளால் எரிபொருள்களுக்காகும் செலவுகள் உயர்ந்து அனைத்து நாடுகளின் திட்டமிடல்களையும் தடம்புரள வைத்துவிட்டன. எனவே இந்தியாவில் அடுத்த நிதியாண்டு இறுதியில் விலைவாசி உயர்வு அதிகரிப்பும், உற்பத்தியில் தேக்க நிலையும் ஏற்படும் என்ற எச்சரிக்கை கவனத்துக்கு உரியது.

ஒன்றிய அரசின் நிதித்துறையும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்தே இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயல்கின்றன. இந்திய உற்பத்தி மதிப்பு 8.7% என்று கணிக்கப்படுகிறது. இது சரியான கணிப்புதானா என்ற கேள்வியும் எழுகிறது. பணவீக்க விகித அளவும் 7.1% என்று கூறப்படுகிறது. அதுவும் அவ்வளவுதானா என்ற வியப்பே ஏற்படுகிறது. காரணம் உள்ளூர் நிலவரங்கள் இதற்கேற்ப இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த தரவுகளும் நம்பும்படியாக இல்லை. அதாவது அந்தந்த பிராந்தியத்தில் வெவ்வேறாக நிலவுகிறது. தேசிய சராசரியோ, தரவுகளோ சரியாக இருக்குமா என்ற சந்தேகமே ஏற்படுகிறது.

இது போதாது!

நிதியமைச்சகம் இந்த நேரத்திலும் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் நடவடிக்கைகளைவிட - அரசின் செலவுகள் வருவாயைவிட அதிகமாகிவிடாமல் தடுப்பதற்கே, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை தருகிறது. இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதாரத் திறனை மதிப்பிடும் நிறுவனங்கள் இந்தியாவைப் பாராட்டலாம். ஆனால் பொருளாதாரம் முழு அளவு மீட்சியடைய இது போதாது.

இந்திய ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பு வேகமாகச் சரிகிறது. எரிபொருள் விலை உயர்வும் தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பும் அன்னியச் செலாவணி கையிருப்பைத் தொடர்ந்து கரைக்கின்றன. அமெரிக்காவில் வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி வீதம் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்திருந்த முதலீட்டை விலக்கிக் கொள்கின்றனர்.

தோல்வியைத் தழுவிய முடிவு

உலக அளவில் தங்க இறக்குமதியில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. இந்தியர்களின் தங்க மோகம்தான் இதற்குக் காரணம் என்றாலும் உள்நாட்டில் மத நிறுவனங்களிலும் தனியாரிடத்தும் மிதமிஞ்சி இருக்கும் தங்கக் கையிருப்பை புழக்கத்துக்குக் கொண்டுவந்து மறு சுழற்சி மூலம் அதை தேவைப்படும் இந்தியர்களுக்கு விற்கும் சாதுர்யமான திட்டத்தை ஒன்றிய அரசு இதுவரை வகுக்கவில்லை. தங்கத்தை முதலீடு செய்வதற்கு அது விதிக்கும் நிபந்தனைகளும் தங்க முதலீட்டுப் பத்திரங்களை விற்கும்போது லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயமும் நடுத்தர மக்களுடைய உற்சாகத்தைக் குலைக்கின்றன.

கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் வழக்கம்போலவே தோல்வியைத்தான் சந்திக்கின்றன. கறுப்புப் பணக்காரர்கள் புதிய வழியாக கிரிப்டோ கரன்சி என்ற வடிகாலைக் கண்டுபிடித்து அதில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் அவ்ர்கள் அனைவருமே லாபம் பெறுகின்றனரா என்பது தெரியாவிட்டாலும் அரசு மூலம் முதலீடு செய்யும் பணத்துக்குக் கணக்கு காட்ட வேண்டும் என்பதுடன் கிடைக்கும் வருமானத்துக்கு வரியும் கட்ட வேண்டும் என்பதால், திரைமறைவு முதலீடுகள் தொடர்கின்றன. கிரிப்டோ கரன்சி மட்டுமல்ல, ஹவாலா பரிமாற்றங்களும் தொடர்ந்து கொடிகட்டிப் பறக்கின்றன. கட்டுப்பாடுகள் அல்ல தளர்வுகளே இதற்கு நல்லத் தீர்வு என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை

பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு இந்திய அரசியல் கட்சிகளே முட்டுக்கட்டைகள் போடுகின்றன. உதட்டளவில் ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு நடைமுறையில் பணக்காரர்கள் வசதிபடைத்தவர்கள் நலனைப் பாதுகாப்பதையே எல்லா அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன. வங்கிகள் மேற்கொள்ளும் வாராக்கடன் தள்ளுபடிகளும் மின்சாரத்துறையில் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து எதிர்க்கும் போக்கும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

விவசாயத்துக்கு விலையில்லா மின்சாரம், நெசவாளர்களுக்கு மின் கட்டணத்தளர்வு, குடிசை வீடுகளுக்கு மின்துய்ப்பில் சலுகை என்பதெல்லாம் உண்மையில் நல்ல திட்டங்களாக இருந்தாலும் அவற்றை அமல் செய்வதில் ஊழல, ஊதாரித்தனம் இரண்டும் ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் எந்தெந்தத் துறையில் யாருக்கு இது உண்மையில் பலன் அளிக்கிறது என்பதை அளக்கக் கூட முடியாமல் இழப்புகள் கூடுகின்றன. இதற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்படும்போது மாநிலங்களின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடுவதாக முறையிடப்படுகிறது. உள்நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களில் உற்பத்தி தொய்வடைந்த நிலையில் வெளிநாட்டு நிலக்கரியைக் கொண்டுவந்தால்தான் அனல் மின் நிலையங்களை இயக்க முடியும் என்று பல மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. உள்நாட்டு நிலக்கரியில் சாம்பல்சத்து அதிகம், எரிதிறன் குறைவு என்று இதற்குக் காரணம் கூறப்படுகிறது.

மாற்று எரிபொருள்

புதைபடிவ எரிபொருள்களுக்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதால் காற்று, சூரியஒளி மின்சாரத்தை அதிக அளவில் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு இருக்கிறது. புவி வெப்படமடைவதைத் தடுப்பதற்கான இலக்குகள் ஒருபுறம் இருந்தாலும் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் மாற்று எரிபொருள்களுக்கு முன்னுரிமை தர வேண்டிய கடமை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

வீட்டுக் கூரைகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களைத் தமிழகம் போன்ற தென் மாநிலங்கள் முழு அளவில் செயல்படுத்தினால் அனல் மின்சாரத் தேவை கணிசமாகக் குறைவதுடன் தொழிற்சாலை, விவசாயப் பயன்பாட்டுக்கு அதிக மின்சாரம் வழங்க முடியும். என்ன காரணத்தாலோ மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன.

விவசாயத்துக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதுடன் நெருக்கடியான காலங்களில் கடன் தவணைகளைச் செலுத்துவதை நீட்டித்தும் அபராத வட்டி ஏதுமில்லாமல் வசூலித்தும் விவசாயிகளுக்கு நிவாரணம் தரலாம். பழைய கடன்களை அடைத்தாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் அடுத்த பருவத்துக்கு புதிதாகக் கடன் வழங்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் கடனை ரத்து செய்வது கூடாது. அதே சமயம் ஜப்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது. இதன் மூலம் கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்தியாக வேண்டும் என்ற தார்மிகப் பொறுப்பை நிரந்தரமாக்கினால் வங்கிகளின் நிதி நிலைமை மேம்படும். வாராக்கடன்களின் அளவும் மதிப்பும் குறையும்.

வங்கி அதிகாரிகள் உடந்தை

பெரிய தொழில் நிறுவனங்களும் தொழிலதிபர்களும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதில் பெரும்பாலானவை மோசடி ரகங்கள். அதில் வங்கிகளின் மூத்த அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதால் மோசடிகள் நடக்கின்றன. கடன் வாங்கித்திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதைப்போல, மோசடிக்கு உடந்தையாக இருக்கும் வங்கி அதிகாரிகளின் சொத்துகள், சேமிப்புகளையும் கைப்பற்ற சட்டமியற்ற வேண்டும். நேர்மையாக முடிவு செய்து வழங்கும் கடன்கள் வியாபார நஷடத்தால் திருப்பிச் செலுத்த முடியாமல் போவதற்கும் திட்டமிட்டே சதி செய்து மேலும் மேலும் கடனைக் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதைத் தணிக்கை மூலம் கண்டுபிடித்துவிட முடியும். அரசுத்துறை வங்கிகளின் உயர் கடன் கோரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாக பரிசீலிப்பதன் மூலம் மோசடி முயற்சிகளை மற்றவர்கள் அடையாளம் கண்டு எச்சரிக்கவும் வழியேற்படும்.

வரி குறைப்பும் விலை குறைப்பும்!

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, வரி குறைப்பு போன்றவற்றை வரவேற்கும் அதே நேரத்தில், சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுடைய எரிபொருள் செலவுகளுக்கு மானியம் தருவதன் மூலம் அவர்களைவிட வறியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதியில்தான் நாம் கை வைக்கிறோம் என்பதை அரசுகளும் அரசியல் கட்சிகளும் உணர வேண்டும். மானியம் என்பது ஒன்றிய, மாநில அரசுகளின் வரி வருவாயிலிருந்துதான் தரப்படுகிறது. குடியிருக்க வீடு கூட இல்லாத ஏழைகள் செலுத்தும் மறைமுக வரிகளிலிருந்து கிடைக்கும் தொகை, சொந்தமாக மோட்டார் வாகனம் வாங்கி தங்களுடைய சொந்த வேலை, வியாபாரம், தொழில் மற்றும் பொழுதுபோக்குகளுக்குப் பயன்படுத்துவோருக்கு மானியமாக தரப்படுவது சமூக நீதியல்ல. அதற்கு மாறாக அரசுப் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றின் சேவையை அதிகப்படுத்தி, அதன் கட்டணங்களைக் குறைப்பதன் மூலம் அனைவருக்கும் அரசு சேவைகளை விரிவுபடுத்தலாம். பொதுப் போக்குவரத்துக்குத் தரப்படும் மானியங்கள் மூலமே ஏழைகளுக்குப் பலன் கிடைக்கும்.

மணல், ஜல்லி விலை

மணல், ஜல்லி, சவுடு போன்றவற்றைக் கட்டுமானத்துக்கு மக்கள் வாங்கும் விலைக்கும் அவற்றை அகழ்ந்து விற்போர் அரசுக்குத் தரும் தொகைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கிறது. இப்படி பலர் கைகள் வழியாக அதன் விலை மட்டுமே ஏற்றம் கண்டு நுகர்வோருக்கு கடும் சுமையை ஏற்படுத்துகிறது. இந்தத் துறைகளில் அரசுகள் கவனம் செலுத்தி, நேரடியாக அரசுகளே விற்பதன் மூலம் அரசுகளுக்கு வருவாய் பெருகும், நுகர்வோருக்கு விலையும் குறையும். இடைத்தரகர்கள் மூலம் யாரோ சம்பாதிப்பதைத் தடுப்பதும் விலைவாசியைக் குறைக்க உதவும். சிமென்ட், ஜல்லி, முருக்குக் கம்பி, சாயம் போன்றவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்தால் கட்டுமானச் செலவுகள் குறைந்து மனை வணிகத்துறையில் வியாபாரம் கூடும்.

அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றின் மொத்தத் தேவைக்கும் கையிருப்புக்கும் பெரிய இடைவெளி இல்லாத சமயங்களிலும் லாரிகள் வேலை நிறுத்தம் போன்றவற்றைக் காரணம் காட்டி விலையை ஏற்றுவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் விளையும் பொருள்களின விலை உயர்வுக்குக் கூட உக்ரைன் போர் உதாரணமாகக் காட்டுப்படுகிறது. இந்தப் பகல் கொள்ளைகளை அரசுகள் முனைப்புடன் கட்டுப்படுத்தினாலும் விலையுயர்வு குறையும்.

ஜிடிபி – கடன் அளவு விகிதம்

ஒன்றிய அரசு இந்திய நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிடமும் வாங்கிய மொத்தக் கடன் அளவுக்கும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்புக்கும் (ஜிடிபி) இடையிலான விகிதம் அதிகமாக இருக்கிறது. உள்நாட்டு – வெளிநாட்டுக் கடனை இந்தியா குறைக்க வேண்டும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) மட்டுமல்ல ரிசர்வ் வங்கியும் சுட்டிக்காட்டுகிறது. நேர்முக வரி வருவாயை ஓரளவுக்கு மேல் பெருக்க முடியாதபடிக்கு இங்கு ஏழ்மை நிலவுகிறது. அரசுத்துறை நிறுவனங்களில் அவசியமானவற்றை மட்டும் அரசு நடத்த வேண்டும். உற்பத்தி, சேவைப் பிரிவுகளிலும் அரசு கட்டாயம் பங்கேற்க வேண்டிய துறைகளில் மட்டும் அரசு ஈடுபடுவது வீண் விரயத்தைக் குறைக்கும். பேருந்து போக்குவரத்தை நாட்டின் எந்த மூலைக்கும் மேற்கொள்ளும் அளவுக்குத் தனியார்கள் பெருகிவிட்டனர். அவர்களிடையே நியாயமான போட்டிக்கு வழிவகுத்து, கட்டண நிர்ணயத்தை அரசே மேற்கொண்டால் மக்களுக்கு தரமான சேவை கிடைப்பதுடன் அரசு அரிய முதலீடுகளை வேறு துறைகளுக்குத் திருப்பி விடலாம். மும்பை மாநகரம் முழுவதற்கும் போக்குவரத்து, மின்சார விநியோக சேவைகளை டாடா நிறுவனம்தான் ஏற்று நடத்துகிறது. தனியார் நிறுவனம் ஏகபோகமாகிவிடாமல் அரசு பார்த்துக் கொள்வதும் அவசியம்.

கல்வி, சுகாதாரத் துறைகளில்கூட தனியார் பங்கேற்பு இருந்தால்தான் அரசுத்துறைக்கு போட்டி போடவும் ஒப்பிட்டுப் பார்த்து தரத்தை மேலும் கூட்டவும் வாய்ப்புகள் ஏற்படும். அரசே ஏகபோகம் என்றால் நாளடைவில் மெத்தனம் ஏற்படுவதுடன் ஊழலும் தரக்குறைவும் கட்டுக்கடங்காமல் போய்விடும்.

5 மாநிலங்கள்

பிஹார், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில், மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்புக்கும் அவற்றுக்குள்ள கடன் சுமையின் அளவுக்குமான விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது கடன் அதிகரிக்கும் அளவுக்கு வருவாய் உயரவில்லை. அதைப்பற்றி அந்த மாநில அரசுகள் அதிகம் அக்கறையும் காட்டுவதில்லை. பொது சரக்கு சேவை வரியைக் கொண்டு வந்ததன் நோக்கம் இந்தியா முழுவதும் ஒரே விகிதத்தில் வரிவிதிப்பு இருந்தால் அன்னியத் தொழில் முதலீடு பெருகும், ஒரு மாநிலத்தில் குறைந்த வரி, இன்னொரு மாநிலத்தில் அதிக வரி என்று விதித்தால் குறைந்த வரிவிதிப்புள்ள மாநிலங்களுக்கு உற்பத்தி அலகுகள் இடம் மாறும் சமச்சீரின்மை நேரக்கூடாது என்றே ஜிஎஸ்டி ஏற்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே வரி வருவாய் வசூலிப்பில் திறமையாக இருந்த மாநிலங்கள் மட்டுமே தொடர்ந்து அதிக வருவாயை ஈட்டுகின்றன, முன்னர் அதில் நிபுணத்துவம் இல்லாத மாநிலங்கள் அப்படியே மெத்தனமாகத் தொடர்வதால் முன்னேறிய மாநிலங்களுக்கே கூடுதல் சுமையை ஏற்றுகின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகள் குறைப்பு, அதை மோசமாகச் செயல்படுத்திய மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் என்பது அரசியல் கட்டத்து சமூக அநீதியாக இருக்கிறது.

நிதி நிர்வாகம் என்பது வெறும் பொருளாதாரம் தொடர்புள்ளதாக மட்டுமல்லாமல் பெருமளவுக்கு அரசியல் சார்ந்ததாக இருப்பதால் ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையே பிணக்கு ஏற்படுகிறது. ஜிஎஸ்டி வரி விகிதங்களைச் சீரமைக்க கூடிய நிதியமைச்சர்கள் கூட்டம் கருத்தொற்றுமை காண முடியாமல் கலைந்திருப்பது சமீபத்திய உதாரணம். நிதித்துறை முடிவுகளை அரசியல் பார்வையே தீர்மானிக்கிறது.

கட்டணக்கொள்ளை

ரயில் துறைக்கென்று தனி பட்ஜெட் இல்லாமல் அதை பொது பட்ஜெட்டிலேயே சேர்த்துவிட்டாலும் பல மாநில அரசுகள் அதில் அக்கறை செலுத்தாததால் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டது. மக்களிடம் பாராட்டுப் பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த 15 ஆண்டுகளாக ரயில் பட்ஜெட்டில் சரக்கு, பயணக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. ஆனால் சமீப காலமாக நிர்வாகக் கட்டணங்கள், முன்பதிவுக் கட்டணம், தத்கல், சிறப்பு ரயில் கட்டணம் என்ற பெயரில் முன்பைவிட அதிகம் வசூலிக்கிறது ரயில்வே. இந்த கட்டணக் கொள்ளையும் மாநில அரசுகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. இதனால் இதற்கு போட்டியாளர்களான மோட்டார் வாகனத் துறையும் கட்டணங்களைத் தங்கள் மனம்போனபடி உயர்த்தி மக்களைப் பண்டிகைக் காலங்களில் கசக்கிப் பிழிய வழியேற்பட்டுள்ளது.

வரி விதிக்காமல் எந்த நாடும் அரசை நடத்த முடியாது. அந்த வரி விகிதங்களை உயர்த்தாமலும் இருக்க முடியாது. இந்த இரு அடிப்படைகளை ஒப்புக்கொண்டு மக்கள் தாங்கும் அளவுக்கு வரி விதித்து அதில் கிடைக்கும் வருவாயை முழுக்க முழுக்க மக்களுடைய நலனுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் செலவிடுவது நல்ல நிர்வாகத்துக்கு அடையாளம்.

விலைவாசி உயர்வும் பொருளாதாரத் தேக்கமும் புறச் சூழல்களாலும் ஏற்பட்டாலும் அரசுகள் அன்றாடம் கவனித்து எடுக்கும் நடவடிக்கைகளால் மக்களுடைய வேதனையைத் தவிர்க முடியும். பதுக்கல், கள்ளச் சந்தை, இரட்டை விலை ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பது மிக மிக முக்கியம். இல்லாவிட்டால் தும்பைவிட்டு விட்டு வாலைப் பிடிக்கும் கதையாகிவிடும். விலைவாசி உயர்வு, பொருளாதாரத் தேக்க நிலைக்கு அரசுகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளவை தொடர்பாகத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலே பாதிப்பு அதிகமாகாமல் தவிர்த்துவிடலாம் என்பது பொருளாதார நிபுணர்களின் யோசனை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in