ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி அச்சத்துக்கு ஆளான மக்கள்

ஜப்பானில் நிலநடுக்கம் -சித்தரிப்புக்கானது
ஜப்பானில் நிலநடுக்கம் -சித்தரிப்புக்கானது

ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் எழுந்து அடங்கியது.

துருக்கி - சிரிய எல்லையில் நிகழ்ந்த நிலநடுக்க கோரத்தை தொடர்ந்து, இங்கொன்றும் அங்கொன்றுமாய் உலக நாடுகள் நிலநடுக்க அச்சத்துக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றன. அதிலும், வழக்கமான சிறிய அளவிலான நிலநடுக்கங்களும், மக்கள் மத்தியில் பெரியளவில் கவனம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்று ஜப்பானின் ஹொகைடோ தீவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கண்டுணரப்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் ஸ்கேலில் 6.1 என்பவதாக ஜப்பானின் இன்றைய நிலநடுக்கம் அடையாளம் காணப்பட்டது. நிலத்தடியில் சுமார் 43 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் விளைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. வடக்கு ஜப்பானின் குஷிரோ மற்றும் நிமிரோ உள்ளிட்ட கடலோர நகரங்கள் நிலநடுக்க அதிர்வினை நன்கு உணர்ந்தன.

ஜப்பானைப் பொறுத்தளவில் நிலநடுக்கம் என்பது சுனாமியுடன் இணைந்தது என்பதால் அது குறித்தான அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால் சுனாமிக்கான அச்சுறுத்தல்கள் இல்லை என ஜப்பான் வானிலை ஆய்வு முகமை உறுதி செய்தது.

நிலநடுக்க ஆபத்துகளை எதிர்நோக்கியே, ஜப்பானின் கட்டிடங்கள் முதல் பேரிடர் அவசரகால உதவிகள் ஒருங்கிணைப்பு வரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே நிலநடுக்கத்தை விட சுனாமிக்கே அங்கே அச்சம் அதிகம். எனினும் அடுத்து வரும் ஒரு வார காலத்துக்கு நிலநடுக்க வாய்ப்புக்கான எச்சரிக்கையும் அங்கே விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in