வங்கக் கடல் பகுதியில் இன்று அதிகாலையில் 4.2 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.
இன்று அதிகாலை 5.32 மணியளவில் ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான நிக்கோபர் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல், ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்டது, ஆனால் உயிரிழப்புகள் அல்லது உடைமை சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேபாளத்தில் நேற்று மாலை 4.16 மணியளவில் மீண்டும் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த கோர நிலநடுக்கத்தால் சுமார் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் கர்ணாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட், ரூகம் மாவட்டங்கள் சிதைந்தது என்றே சொல்லலாம்.
இந்த கோர விபத்து ஏற்படுத்திய சோகத்தில் இருந்தே நேபாளம் இன்னும் மீளாத வேளையில், நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியாவிலும் எதிரொலித்தது. பொதுவாக புவியியல் அமைப்பின்படி, ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்றே புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2015ல் நேபாள நாட்டில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்துடன் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர். நேபாள் அரசாங்கத்தின் பேரழிவுக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு அறிக்கை குறிப்பிட்டுள்ளபடி, நேபாளம் உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் 11வது நாடாகும்.
மேற்கு ஆப்கான்ஸ்தானில் அக்டோபர் 8ம் தேதி 6.3 என்ற சக்திவாய்ந்த அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, பேரிடர் நிவாரண அதிகாரிகள் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்டபோது அதிர்ச்சிகர செய்தி ஒன்றை வெளியிட்டனர். அந்த நிலநடுக்கத்தில் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.