
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள பகுதியில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3.7 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. கடலுக்கு அடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்திருக்கிறது.
துருக்கி, சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் நான்கு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அந்த தேசமே நிலைகுலைந்து போனது. இதைத்தொடர்ந்து பிலிப்பைன்சில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவிலும் சில மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸுக்கும், இந்தோனேசியாவுக்கும் மத்தியில் உள்ள தனிம்பார் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
அதே நேரத்தில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வீட்டை விட்டு அவசரமாக வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். துபாய், சிரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது மக்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.